வீட்டிற்குள் மகானின் பிருந்தாவனம்!

திருச்சி – ஸ்ரீ ரங்கம்

31 மகான்

அதிசயம் நிறைந்த ஸ்ரீ ரங்கமாநகரம்

தலைப்பை படித்தவுடனே ஆச்சரியமாக இருக்கிறதா! எங்களுக்கும் அப்படிதான் இருந்தது. பூலோக வைகுண்டமானஸ்ரீ ரங்கம், பொதுவாகவே பல ஆச்சரியங்களைளும், அதிசயங்களும் நிறைந்தது. ஆசியாவின் மிக உயரமான ராஜகோபுரம் முதல் கருவறையில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாதர் வரை ஆச்சரியமூட்டுபவை. ஸ்ரீ ரங்கம் சுற்றிலும் அதிசயங்கள்தான். ஒரு பக்கம் காவேரி, மறுபக்கம் கொள்ளிடம் நடுவில் ஸ்ரீ ரங்கம்.

அதனால்தான் ஸ்ரீ ரங்கத்தை `தீவு நகரம்’ என்று அழைக்கிறார்கள். விசிஷ்டாத்வைதம் என்னும் உயரிய வைணவ சம்ரதாயத்தை தோற்றுவித்த ராமானுஜாச்சாரியாரின் திருமேனி, இன்றும் ஸ்ரீ ரங்கத்தில் அப்படியே இருப்பதாக ஐதீகம். சமீபத்தில், ஸ்ரீ ரங்கத்தை அடுத்த மேலூர் என்னும் பகுதியில், 37 அடி உயர `ஸ்ரீசஞ்சீவன ஆஞ்ச நேயர்’ கோயில் பிரபல்யம். இந்த அனுமன், தமிழ்நாட்டிலேயே இரண்டாவது உயரமான அனுமனாவார்.

மகான் ஸ்ரீராகவேந்திரரின் சீடரான ஸ்ரீயோகீந்திர தீர்த்தரின் மூலபிருந்தாவனமும், அவருக்கு அடுத்தடுத்து வந்த ஸ்ரீசுமத்தீந்திர தீர்த்தர், ஸ்ரீஉபேந்திர தீர்த்தர், ஸ்ரீமுனிந்திர தீர்த்தர் ஆகியோர்களின் மூலப்பிருந்தா வனமும் உள்ளது. அதேபோல், வியாசராஜ தீர்த்தரின் வழிவந்த ஐந்து மூலபிருந்தாவனங்கள் உள்ளது.

அன்று முதல் இன்றுவரை பல ஆச்சாரிய புருஷர்களும், மகான்களும், முனிவர்களும் காலடிபட்ட இடம், ஸ்ரீ ரங்கம்! இப்படி இன்னும் பல ஆச்சரியங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஸ்ரீ ரங்கத்தைப்பற்றி இவைகளெல்லாம் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், யாருக்கும் தெரியாத, அதிசயவைக்கும் ஒரு மகானின் பிருந்தாவனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில், தரிசிக்க விருக் கிறோம்.

85 வயதில் சந்நியாசம்

ஸ்ரீ ரங்கத்தில் வசிப்பவர்களுக்குக்கூட இப்படி ஒரு பிருந்தாவனம் வீட்டிற்குள்ளே இருப்பது தெரியாது.நமக்கும் தெரியாது. “அட… வீட்டின் உள்ளே பிருந்தாவனமா!’’ என்று ஆச்சரியப்பட்ட நாம், பிருந்தாவனத்தை தேடிக் கண்டு பிடித்தோம்.ஸ்ரீ ரங்கம் மங்கம்மா நகர் நுழைவு பகுதியின் அருகில், ஒரு வீட்டின் முகப்பு வழியாக உள்ளே சென்றோம். முகப்புதான் சிறியதே தவிர, வீடு மிகப்பெரியது. பொதுவாகவே ஸ்ரீ ரங்கத்தில் உள்ள அக்கால வீடுகள் அனைத்துமே முகப்பு சிறியதாக காணப்படும். வீட்டின் உள்ளே சென்றால் மிக பெரியதாக இருக்கும். வீட்டிற்குள் நுழைந்தவுடன், வலது பக்கத்தில், ஒரு சிறிய அறையில், பிருந்தாவனம் காணப்பட்டது. வீட்டிற்குள் ஒரு மத்வ மகானின் பிருந்தாவனமா! என்கின்ற ஆச்சரியத்தோடும், பக்தியோடும் பிருந்தாவனத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம். நம்மையே அறியாது அங்கேயே அமர்ந்து கொண்டோம்.

சிறுது நேரம் கழித்து, பிருந்தாவனத்திற்கு தினமும் பூஜை செய்துவரும், ஸ்ரீ நிவாஸாச்சாரிடம் பிருந்தாவனம் குறித்து கேட்டறிந்தோம். அவர் பேசத் தொடங்கும் முன், ஒரு ஸ்லோகத்தை சொல்லி பேசத் தொடங்கினார். அந்தஸ்லோகம் நம்மை ஆசுவாசப்படுத்தியது. அவர் கூறியதாவது;இந்த பிருந்தாவனத்தில் உள்ளே இருந்து அருளாசி வழங்கும் மகானின் பெயர் “ஸ்ரீமத்வநாத தீர்த்தர்’’. இந்த மகான், பிடி சந்நியாசி. அதாவது, எந்தவொரு மத்வ மடத்தையும் சேராதவர். மத்வநாத தீர்த்தர், சுமார் 100 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றார். சம்சார பந்தத்தில் ஈடுபட்டு, அதன்பிறகு சுமார் 85-வது வயதில் சந்நியாசம் பெற்றுக் கொண்டார். தற்போது, இவரின் பிருந்தா வனம் பிரதிஷ்டை ஆகியே 100 ஆண்டுகள் நெருங்கிவருகின்றன.

26 ஆண்டுகள் விடாது பூஜை

மத்வநாத தீர்த்தர், பல நூல்களை(கிரந்தங்களை) எழுதியுள்ளார். இவரின் பூர்வாஸ்ரம மகனின் பெயர் சி.எம்.பத்மநாபாச்சார். கோயம்புத்தூரில் மிகப்பெரிய வழக்கறிஞர். இவரும், தந்தையைப்போலவே சாஸ்திரத்தில் பல கிரந்தங்களை எழுதியுள்ளார். இப்படியாக, பத்மநாபாச்சாரின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் என இன்றும், மத்வநாத தீர்த்தரின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மத்வநாத தீர்த்தரின் பூர்வாஸ்ரமத்தில், சி.எம்.பத்மநாபாச்சார் மட்டுமே அதாவது ஒரே ஒரு மகன்தான் மத்வநாத தீர்த்தருக்கு. பெண்குழந்தைகள் சுமார் ஐந்து – ஆறு நபர்கள். இப்படி அவர்களின் வம்சாவளிகள் இன்றும் வாழ்ந்துவருகிறார்கள்.

நான் (ஸ்ரீ நிவாஸாச்சார்) மின்துறையில் பணிசெய்து ஓய்வு பெற்றவன். இந்த அக்டோபர் மாதம் வந்தால், நான் ஓய்வு பெற்று 27 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, நான் ஓய்வு பெற்ற இரண்டே மாதங்களில், இந்த பிருந்தாவனத்திற்கு (மத்வநாத தீர்த்தருக்கு) பூஜை செய்ய வந்துவிட்டேன். ஆக, கடந்த 26 வருடங்களாக நானே மத்வநாத தீர்த்தருக்கு பூஜையை செய்து வருகின்றேன். இந்த சந்தர்ப்பத்தில், இதை நினைவுகூரும்போது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

என்னால் பூஜை செய்ய முடியவில்லை என்றால், எனது மகன் மற்றும் பேரன் ஆகியோர் பூஜையை மேற்கொள்வார்கள். பக்தர்கள் இங்கு வந்திருந்து, ஸ்ரீமத்வநாத தீர்த்தரை தரிசிக்கலாமே தவிர, வேறொரு நிகழ்வுகள் அதாவது பண்டிகைகள், உபநயனம், பெரிய காரியங்கள், திவசம் ஆகியவைகள் இங்கு செய்வதில்லை.

தேடிக்கொடுத்த விக்ரஹம்

ஆனால், மத்வநாத தீர்த்தரின் ஆராதனை சமயத்தில், இங்கு விமர்சையாக சில நிகழ்வுகள் நடைபெறும். மத்வநாத தீர்த்தர் பிருந்தாவனம் ஆகும் சமயத்தில், எனக்காக, எனது ஆராதனை தினத்தில், `சுமத்வ விஜயம்’ பாராயணமும், இரண்டு நபர்களுக்கு அன்னதானமும் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு பிருந்தாவனம் ஆகிவிட்டார்.

அதன் காரணமாக, இன்றும் மத்வநாத தீர்த்தரின் ஆராதனை சமயத்தில் மூன்று நாட்களும் `சுமத்வ விஜயம்’ என்று சொல்லக் கூடிய உயரிய வேத பாராயணம் நடைபெறும். மிக முக்கியமாக, மத்வநாத தீர்த்தரின் மகத்துவம் என்னவென்றால், மத்வநாத தீர்த்தரின் பூர்வாஸ்ரம தாத்தாக்கள், கொச்சி ராஜாவின் சபையில் மிகப்பெரிய வித்வான்களாக இருந்திருக்கிறார்கள். அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. மகான் ஸ்ரீவாதிராஜர் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வந்த ஹயக்ரீவர், மத்வ சரோவர் உள்ளே இருக்கிறது. அதனை எடுத்து பூஜை செய்யவும் என்று கனவு ஏற்படுகிறது. (மத்வ சரோவர் என்பது உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் இருக்கும் புஷ்கரணியின் பெயராகும்).

அன்றைய உடுப்பி பர்யாய பூஜையில் இருக்கும் ஸ்வாமிஜியிடத்தில், நடந்தவற்றைகூறி, மத்வ சரோவர் உள்ளே இருக்கும் ஹயக்ரீவரை தேடிக்கண்டுபிடித்து தங்களுக்கு தருமாறு, கேட்டுக் கொண்டார். அதன்படி, மத்வ சரோவர் முழுவதும் தேடிக்கண்டுபிடிக்கிறார்கள். ஒரு கட்டத்தில், ஹயக்ரீவர் கிடைக்கிறார். அந்த விக்ரஹத்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் பிறகு, கனவில் சொன்னது போல், ஹயக்ரீவருக்கு தினமும் பூஜைகளை செய்ய தொடங்கினார்கள்.

இதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. பலிப்பாட்டியம் (வாமன அவதாரம்) மற்றும் யுகாதி ஆகிய இரண்டு தினம் மட்டும், மத்வநாத தீர்த்தரின் பூர்வாஸ்ரம குடும்பத்தில் பிறந்த தலைச்சன் மகன் அதாவது பிறக்கும் முதல் மகன், ஹயக்ரீவர் விக்ரஹத்திற்கு பூஜை செய்வார்கள். மீதம் உள்ள நாட்கள், ஒரு பெட்டியில் ஹயக்ரீவர் விக்ரகத்தை வைத்து மூடிவிடுவார்கள். இந்த வழிமுறைகள், இன்றுவரை தொடர்கிறது! தற்போது ஹயக்ரீவர் விக்ரஹம், பெங்க ளூரில் உள்ளது.

எளிய முறையில் நிவேதனம்

இதன் நினைவாகவும், தானும் ஹயக் ரீவர் மற்றும் வாதிராஜரின் பக்தர் என்கின்ற முறையிலும், தனது (மத்வநாத தீர்த்தர்) பிருந்தாவனத்தின் நடுவில், தன் உருவம் பதித்து, தன் தலையின் மீது ஹயக்ரீவரின் பாதம் இருக்கும்படியாக வடிவமைக்க உத்தரவிட்டார், மத்வநாத தீர்த்தர். அதன் படியே, பிருந்தாவனத்தின் நடுவில், மத்வநாத தீர்த்தரின் உருவத்தையும், மேலே ஹயக்ரீவரின் உருவத்தையும் செதுக்கியுள்ளார்கள். மகான் ஸ்ரீவியாசராஜர் எழுதிய “நியாயாமிர்தத்திற்கு’’, “கலாதரா’’ என்னும் பெயரில் ஸ்ரீமத்வநாத தீர்த்தர் விளக்கவுரை எழுதியுள்ளார். இந்த கலாதரா நூலிற்கு பலதரப்பிலும் கண்டனங்கள் எழுந்தன.

நியாயாமிர்தத்திற்கு, மத்வநாத தீர்த்தர் எழுதிய கலாதராவே கடைசியானது என்று கூறப்படுகிறது. மேலும் கலாதரா நூல், தற்போது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பது பற்றியெல்லாம் அறியமுடியவில்லை. காலையில் எழுந்து, அனுதினமும் காவேரியில் நீராடி, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளே இருக்கக்கூடிய சந்திரபுஷ்க்கரணியில் நீராடி, அதன் பின்னர் ரங்கநாதரையும், விமானத்தையும் தரிசித்து, வீட்டிற்கு வந்தவுடன் சாளக்கிராம பூஜையை மேற்கொள்வார். மேலும், 16 சர்க்கமான “சுமத்வ விஜயம்’’ என்னும் வேத மந்திரத்தையும் தொடர்ந்து பாராயணம் செய்துவந்தார். இதுதான், மத்வநாத தீர்த்தரின் அன்றாட வாழ்க்கை முறை! மத்வநாத தீர்த்தருக்கு பெரியதாக நிவேதனங்கள் எல்லாம் கிடையாது. மிக எளிமையாக, நாம் எதை நிவேதனமாக செய்கிறோமோ.. அதனையே அவர் ஏற்றுக்கொள்கிறார்.

மந்திர அட்சதையின் மகிமை

மத்வநாத தீர்த்தரை பிரார்த்தித்து வேண்டிக் கொண்டால், வேண்டியது கிடைக்கிறது. என்னையே (ஸ்ரீ நிவாஸாச்சார்) இதற்கு உதாரணமாக சொல்லலாம். நான் முன்பே சொன்னது போல, கடந்த 26 வருடங்களாக பூஜை செய்துவருகிறேன். ஒரு மடத்தில், அதுவும் மகானின் சந்நிதானத்திற்கு தொடர்ந்து 26 வருடங்கள் என்பது மிக பெரிய சாதனையாக கருதுகிறேன். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், உறவினர்கள் யாரேனும் இறந்துபோகும் சமயத்தில், நானும் எனது குடும்பத்தாரும் மத்வநாத தீர்த்தருக்கு பூஜை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். நாங்கள் அனைவரும் செய்வது அறியாது திகைத்திருப்போம். அப்போது, சரியாக யாராவது வீட்டிற்கு வருவார்கள். அவர்களிடத்தில், விஷயத்தை சொல்லி பூஜை செய்ய உதவி கேட்போம். அவர்களும் பூஜையை செய்து முடிப்பார்கள். இதுபோல், பலமுறை நடந்துள்ளது.

இந்த இடத்தில், நானும் எனது மகன் யதுனந்தாச்சார் ஆகியோர் தொடர்ந்து வேதம், புராணம் ஆகியவைகளை பலருக்கும் கற்றுத்தந்திருக்கிறோம். அவர்கள் அனைவரும் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அத்தகைய சாந்நித்தியம் நிறைந்த இடமாகும். மத்வநாத தீர்த்தருக்கு, தவ வலிமை அதிகம். ஸ்ரீ ரங்கத்திற்கு வந்து, மத்வநாத தீர்த்தரை தரிசித்து மந்திராட்சதையை பெற்றுக்கொண்டு சென்றால், திருமணப் பாக்கியம், குழந்தைப்பாக்கியம் ஆகியவை உடனே கிடைக்கின்றன. பலரும் என்னை தொடர்புகொண்டு, காரியம் சித்தியடைந்ததாக கூறுகிறார்கள். கைங்கர்யம் செய்ய விரும்புவோர் தொடர்புக்கு:

ஸ்ரீ நிவாஸாச்சார் – 9245566780.

ரா.ரெங்கராஜன்

Related Stories: