இறைவனும் மனிதனும்

பகுதி 5

விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு அறிந்தால்தான் ஆன்மிகம் குறித்த விழிப்புணர்வைப் பெற முடியும். ஆன்மிக விழிப்புணர்வின் முதல் படியே இந்தத் தற்சோதனைதான்.
அசைவற்ற தாவரங்களும், விலங்குகளும் தங்களின் இயற்கை மாறாத் தன்மையிலேயே வாழ்கின்றன. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது; மாமரம் ஒருபோதும் வேப்பங்காயைத் தராது. அவை பிரபஞ்சத்தின் விதிகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, தங்களின் ‘‘இயற்கைக் குணத்தில்” இருந்து சற்றும் பிறழாமல் வாழ்கின்றன.
இப்பொழுது மனிதர்களின் அறிவு அதிலும் சில மாற்றங்களைச் செய்து வருகிறது. அது விஞ்ஞானமா, விபரீதமா என்பதை காலம் முடிவு செய்யும்.
மாற்றங்களைச் செய்யும் அறிவு மனிதனுக்கு இருக்கிறது. ஆனால், அந்த மாற்றங்களை எங்கு நிறுத்த வேண்டும் என்ற விவேகம் அவனுக்கு இருக்கிறதா என்பது தான் இன்றைய கேள்வி. மனிதனின் பலத்தில் பலவீனமும் இருக்கிறது.
மனிதன் மட்டுமே ‘‘சுய விருப்பம்” மற்றும் ‘‘பகுத்தறிவு” கொண்டவன். ஒரு மனிதன் நினைத்தால் விலங்கைவிட மோசமாக இறங்கவும் முடியும்; அல்லது ஆன்மிகத்தின் உச்சத்துக்கேறி இறைநிலையை அடையவும் முடியும். வாழ்வியலில் இதை நாம் பார்க்க முடியும். மனிதர்கள் சில நேரத்தில் படுமோசமாக இருக்கிறார்கள். பசி, பயம், கோபம், காமம், சுயநலம் போன்ற அடிப்படை உணர்ச்சிகள் மட்டுமே மேலோங்கி நிற்கும்போது மனிதன் விலங்காக, இன்னும் சொல்லப்போனால், பல விலங்குகளின் ஒட்டுமொத்தக் கொடூரமும் சேர்ந்த ‘‘ராட்சசனாக” மாறுகிறான்.
தன் பசிக்காகப் பிறரைக் கொல்லும் விலங்கை விட, தன் பேராசைக்காகப் பலரின் வாழ்வைக் கெடுக்கும் மனிதன் ஆபத்தானவனாகிறான்.
இதற்குக் காரணம், விலங்கிடம் இருப்பது வெறும் வாழ்வாதாரத்திற்கான வேட்கை மட்டுமே; ஆனால், மனிதனிடம் இருப்பது அகங்காரமும் வக்கிரமும் ஆகும்.
இன்னொரு நேரத்தில் அவன் பரம சாதுவாக இருக்கிறான். பிறருக்கு வலிய வந்து உதவுகின்றான். ‘‘தெய்வம் ஐயா அவன்” என்று சொல்லும்படி நடந்து கொள்கிறான். ஒவ்வொரு மனிதரிடத்தில் இது தனித்தனியாகவும் இருக்கிறது. ஒரே மனிதரிடத்தில் இரண்டும் சேர்ந்தும் இருக்கிறது.
மனிதன், தன்னுள் இருக்கும் சுயநலத்தைக் கடந்து, பிறரின் துயர் கண்டு உருகி, ‘‘வலிய வந்து உதவும்போது” அவனுள் இருக்கும் ‘‘தெய்வ நிலை” விழித்துக் கொள்கிறது.
ஒரே மனிதனிடம் இந்த இரண்டு குணங்களும் மாறிமாறி வெளிப்படுவதுதான் மனித வாழ்வின் ஆகப்பெரிய சவால். காலையில் கோபத்தில் கத்தியவன்தான், மாலையில் ஒரு ஏழைக்குக் கண்ணீர் மல்க உதவுகிறான்.
விலங்குகள் தங்களின் குணங்களுக்கு அடிமைகள், அவற்றால் அதை மாற்றிக்கொள்ள முடியாது. ஆனால், மனிதன் மட்டுமே தன்னுள் இருக்கும் மிருகத்தைக் கட்டுப்படுத்தி, தெய்வநிலைக்குத் தன்னை உயர்த்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவன். இந்த இரண்டு குணங்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற விழிப்புணர்வை அடைவதுதான் ஆன்மிகப் பயணத்தின் மையப்புள்ளியே.
நாம் புராணங்களில் அசுரர்களையும் தேவர்களையும் தேடுகிறோம். உண்மையில் இருவருமே நாம்தான். இந்திரன் மகனாகிய ஜயந்தன் ஒரு காகம் வடிவமெடுத்து, சீதையை தீய எண்ணத்தோடு தீண்ட வந்தபோது அவன் பேராண்மை நீங்கி அசுரனாக. மாறினான். காகாசுரன் என்றே இன்றளவும் அவனைப் புராணம் சொல்கிறது. அதாவது, பிறப்போ அல்லது நாம் இருக்கும் பதவியோ நம்மை உன்னதமானவராக மாற்றுவதில்லை; நம் எண்ணங்களும் செயல் களுமே நம்மைத் தீர்மானிக்கின்றன. உயர்ந்த நிலையில் உள்ள வனும் ஒரு கணநேரத் தீய எண்ணத்தால் அசுர நிலைக்குத் தாழ முடியும் என்பதற்கு இவனே சான்று.
இதற்கு நேர் எதிர் உதாரணம் பிரகலாதன். அவன் பிறப்பால் அசுரகுலத்தைச் சேர்ந்தவன்; அசுர வேந்தனான இரணியகசிபுவின் மகன். ஆனால், அசுர குலமாக இருந்தாலும், அவனது எண்ணமும் அறிவும் ‘‘இறைப் பொருளையே (Divine Truth)” நாடி நின்றன.
தன் தந்தை அசுரத்தனத்தின் உச்சமாக நின்று அச்சுறுத்திய போதும், ‘அரி நமோ நாராயணாய’ என்ற பிரணவ மந்திரத்தை, இறைத் தத்துவத்தை முறைப்படி உலகிற்கு உணர்த்தினான்.
அதனால்தான், வைணவ மரபில் அவன், ‘‘பிரகலாத ஆழ்வான்” என்று போற்றி அரியணையில் அமர்த்தப்பட்டான்.
நாம் விழிப்புணர்வின்றி, நம் புலன் களின் போக்கிலும் சுயநலத்திலும் வாழும்போது நமக்குள் இருக்கும் அசுரன் விழித்துக்கொள்கிறான்.
நாம் விழிப்புணர்வோடு, தர்மத்தின் வழியிலும் அன்பிலும் வாழும் போது நமக்குள் இருக்கும் தேவன் வெளிப்படுகிறான்.
பிரகலாதன் கதையை எடுத்துக் கொள்வோம்: அவன் கருவில் இருக்கும்போதே உன்னதக் கருத்துக்களை நாரதர் எடுத்துச் சொன்னார் என்று பார்க்கிறோம். கருவிலேயே அறம் கற்றவன் பிரகலாதன். அதனால்தான் நம் முன்னோர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு, பூச்சூட்டல் (வளைகாப்பு), மங்களகரமான சடங்குகள், மற்றும் நல்ல மந்திரங்களை ஓதுதல் போன்ற சடங்குகளைச் செய்தார்கள்.
இன்றைய நவீன விஞ்ஞானம், கர்ப்ப காலத்தில் தாய் கேட்கும் ஒலிகளும், அவளது மனநிலையும் (Emotions) கருவில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியையும், குணநலன்களையும் நேரடியாகத் தீர்மானிக்கின்றன, என்கிறது.
ஒரு தலைமுறையை, அதன் பிறப்பிற்கு முன்பிருந்தே எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற பேரறிவை ஆன்மிகமே சடங்கு களாகவும், மந்திரங்களாகவும் நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
பெற்றோர்கள் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு நல்வழிப்படுத்த முயல் வதைப் போலவே, அவர்கள் கருவில் இருக்கும் போதே நல்ல குணங்களை விதைக்க வேண்டும் என்ற உன்னத விழிப் புணர்வை பிரகலாதன் கதை நமக்கு இன்றும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது.
இங்கே பிரகலாதன் என்கிற உன்னத ஜீவனுக்கு உதவியது ஆன்மிகம்.
ஆன்மிகம் என்பது நமது அன்றாட வாழ்வியலை அறத்தோடு வாழ்வதற்கும் பிறருக்கு உதவியாக வாழ்வதற்கும் எல்லோரும் இணைந்து சந்தோஷமாக வாழ்வதற்கும்தான்.
ஒரு கோயில் திருவிழா வந்தால் அந்த ஊரே மகிழ்ச்சியில் மிதக்கிறது. மனிதன் தனித்திருக்கும் போது வரும் மனச்சோர்வை, இந்த ஊர்கூடிக்கொண்டாடும் திருவிழாக்கள் அடியோடு விரட்டி விடுகின்றன. வண்ண விளக்குகள், மங்கள ஒலிகள், உறவினர்களின் வருகை என அந்த ஊரே மகிழ்ச்சியில் மிதப்பது மனிதனின் அக அழுத்தங்களைக் குறைப்பதற்கான ஆன்மிக உளவியல்.
அன்றாட ஓட்டப்பந்தயத்தில் மனிதன் தன் புலன்களின் போக்கிலேயே வாழ்கிறான். ஆனால், ஒரு விரதம் என்று வரும்போது அவன் தன்னுள் இருக்கும் மிருகக் குணத்தைக் கட்டுப்படுத்தப் பழகுகிறான்.
பசி எடுத்தாலும் குறிப்பிட்ட நேரம் வரை பொறுத்திருப்பது (உண்ணா விரதம்) அவனுக்குப் பொறுமையையும், புலனடக்கத்தையும் கற்றுத் தருகிறது. மனிதன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும் ஆன்மிகரீதியாக முன்னேறுவதற்கும்தான். இந்த உற்சவங்களும் விழாக்களும் விரதங்களும் இருக்கின்றன.

Related Stories: