தொடர் போராட்டம், அரசின் அழுத்தத்தால் நர்ஸ்களை அவதூறாக பேசிய மகளிர் ஆணைய தலைவி ராஜினாமா

 

சண்டிகர்: நர்ஸ்களை அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆய்வு நடந்தபோது, அங்கிருந்த நர்சிங் அதிகாரி ஒருவரை மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா தரக்குறைவாக நடத்தியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக நர்சிங் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரில், ‘அவர் எங்களது புனிதமான பணியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதுடன், பெண் அதிகாரியுடன் மிகவும் மோசமாக நடந்து கொண்டார்’ என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடுத்து மாநிலம் முழுவதும் நர்சிங் ஊழியர்கள் ரேணு பாட்டியாவுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகள் முன்பாக நர்ஸ்கள் திரண்டு தர்ணா நடத்தினர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் ரேணு பாட்டியா பிடிவாதமாக இருந்தார்.

இதுகுறித்து அரியானா பாஜக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி ராவ் கூறுகையில், ‘குருக்ஷேத்திராவில் நடந்த சம்பவம் மிகவும் வெட்கக்கேடானது; இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், நர்ஸ்களின் தொடர் போராட்டத்திற்கும் மாநில அரசின் அழுத்தத்திற்கும் பணிந்த ரேணு பாட்டியா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இச்சம்பவம் அரியானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: