கார்வால்: உத்தராகண்ட் மாநிலம் பௌரி கார்வால் மாவட்டத்தில் சிறுத்தை தாக்கியதில் பெண் உயிரிழந்த நிலையில், அந்த சிறுத்தை வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. உத்தராகண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தில் உள்ள படி கிராமத்தில், நேற்று மதியம் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வீட்டின் அருகே உள்ள வயல்வெளிக்குச் சென்ற பிரபா தேவி (55) என்ற பெண் சென்றார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர் தேடிச் சென்றபோது, வயலில் ரத்தக் கறைகளுடன் மனைவியின் உடல் சிதைந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களிடம் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். பெண்ணின் உடலைத் தேடியபோது, சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் சிறுத்தை பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தேடுதல் குழுவினர் நெருங்கியபோது புதர்களுக்குள் மறைந்திருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து வந்து மக்களை தாக்க முயன்றது.
இதுகுறித்து கார்வால் கோட்ட வன அதிகாரி மகாதிம் யாதவ் கூறுகையில், ‘கூட்டத்தை நோக்கி சிறுத்தை ஆக்ரோஷமாக பாய்ந்ததால், தற்காப்புக்காக வனத்துறை வேட்டை பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் சிறுத்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது’ என்றார். சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
