டெல்லி: இந்திய ராணுவம் தனது பீரங்கி வலிமையை மேலும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. கூடுதல் பீரங்கிகளை வாங்குவதற்கான ஒரு முக்கியத் திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்து வருகிறது. இந்த திட்டத்தின்படி சுமார் 300 K9 Vajra-T ரக தானியங்கி பீரங்கிகளை வாங்குவதற்கான முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாகப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.
சுமார் ரூ.23,000 கோடி மதிப்பிலான இந்த முன்மொழியப்பட்ட பிரம்மாண்ட திட்டமானது, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான எல்லைப் பகுதிகளில் தாக்குதல் திறனை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும், மிக பெரிய பீரங்கிக் கொள்முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து, வரும் நாட்களில் பாதுகாப்புத் துறை கொள்முதல் வாரியம் (DPB) தீவிரமாக பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொள்முதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், நாட்டின் மேற்கு மற்றும் வடக்கு எல்லைகள் என இரு பகுதிகளிலும் இந்தியாவின் நீண்ட தூரத் தாக்குதல் திறன் கணிசமாக வலுப்படும்.
இது தொடர்பாக பேசியிருக்கும் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், பாலைவனம் மற்றும் அதிக உயரமுள்ள பகுதிகள் என இரு பரப்புகளிலும் கே9 வஜ்ரா பீரங்கியைப் பயன்படுத்தியதில் கிடைத்த நல்ல அனுபவத்தைத் தொடர்ந்து இந்த திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது. சமவெளிகள் மற்றும் பாலைவனப் போருக்காகவே முதலில் வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கி, சீனாவுடனான ராணுவ மோதலுக்குப் பிறகு கிழக்கு லடாக்கில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது, அங்கு மலைப்பாங்கான சூழலிலும் இது சிறப்பாக செயல்பட்டது என்றார்.
கே9 வஜ்ரா-டி என்பது 155மிமீ/52-கேலிபர் சக்கரங்களைக் கொண்ட, தானாக இயங்கும் ஒரு ஹோவிட்சர் பீரங்கி ரகம் ஆகு. இது நீண்ட தூரத்திலிருந்து துல்லியமாகத் தாக்கும் திறன் மாற்று இலக்கை குறிபார்த்து துல்லியமாக் சுட்டுவிட்டு விரைவாக இடம்பெயரும் திறன் கொண்டது. இந்த பீரங்கி, தென் கொரியாவின் ஹன்வா ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதில் கணிசமான உள்நாட்டுத் தயாரிப்புப் பொருட்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
