புதுடெல்லி: கணவரிடம் ஏற்பட்ட குடும்ப வன்முறை காரணமாக நடிகை சப்னா சவுத்ரிக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி மற்றும் நடிகையான சப்னா சவுத்ரி, தனது கணவர் யஷ்வீர் சாகு என்பவரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். கணவரின் சித்திரவதை மற்றும் பொது இடங்களில் அவர் நடத்திய அநாகரீகமான செயல்கள் காரணமாக, சப்னா சவுத்ரி தனது 2 குழந்தைகளுடன் குடும்ப வீட்டை விட்டு வெளியேறினார்.
இது தொடர்பாக டெல்லி துவாரகா மகளிர் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை புகாரை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் நிதி சிங், சப்னா சவுத்ரிக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த மருத்துவ ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் கணவர் விடுத்த மிரட்டல் பதிவுகளை ஆதாரங்களாக ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, பாடகி சப்னா சவுத்ரிக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம், அவரது கணவர் யஷ்வீர் சாகு அவரை எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவோ அல்லது அவரது வீடு மற்றும் பணியிடங்களுக்குச் செல்லவோ கூடாது என அதிரடியாக உத்தரவிட்டது.
குறிப்பாக, வரும் நாட்களில் நடக்கவிருக்கும் திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு அவர் வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை சப்னாவின் கணவரிடம் வழங்கி, பாடகிக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அப்பகுதி போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
