சென்னை: திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்த்திரையுலகுக்கு பேரிழப்பாகிவிட்ட பெருங்கலைஞனின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து புதுப்போக்கினை உருவாக்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு வேதனையைத் தருகிறது. திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜாவால் கிராமங்களுக்குள் நுழைந்தன என தெரிவித்தார். தமிழ்சினிமாவின் அவரது படைப்புகளை வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது.
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
