கீழக்கரை- தேரிருவேலி இடையே அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கம் பொதுமக்கள் மகிழ்ச்சி

சாயல்குடி, மார்ச் 7: கீழக்கரையில் இருந்து சிக்கல், வல்லக்குளம் வழித்தடத்தில் தேரிருவேலிக்கு கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சாயல்குடி அருகே சிக்கல் கிராமம் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இதனை சுற்றி ராஜாக்கள்பாளையம், சொக்கானை, வல்லக்குளம், பேய்க்குளம், பனிவாசல், ஆதங்கொத்தங்குடி, பூசேரி, தேரிருவேலி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மேல்நிலை கல்வி, மருத்துவ உதவி, அரசு சான்றுகள் பெறுவதற்கு என அனைத்து தேவைக்கும் சிக்கல், தேரிருவேலி, கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடிக்கு தான் வந்து செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 1984ல் ராமநாதபுரம் அரசு பஸ் டிப்போ சார்பில் கீழக்கரையில் இருந்து ராஜாக்கள்பாளையம், சிக்கல், வல்லக்குளம் வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் ஒன்று இயக்கப்பட்டது.

இந்த பஸ்சை விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இப்பஸ்சை கடந்த 3 மாதங்களாக திடீரென நிறுத்தி விட்டனர். இதனால் இப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி பெரும் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினகரனில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று முன்தினம் முதல் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது. இதையடுத்து செய்தி வெளியிட்டமைக்காக 10 கிராமமக்கள் சார்பாக முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அரண்மனைசாமி, தேரிருவேலி பஞ்சாயத்து தலைவர் அபுபக்கர் சித்திக் ஆகியோர் தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Related Stories: