சிக்கிம் லாட்டரி விற்பனையில் ரூ.910 கோடி முறைகேடு ரூ.457 கோடி சொத்து முடக்கத்தை நீக்க கோரி மார்ட்டின் வழக்கு: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-10ம் ஆண்டுகளில், சிக்கிம் மாநில லாட்டரியில் பரிசு விழும் சீட்டுகளை விற்காத சீட்டுகளாக அறிவித்து அவற்றை ஏஜென்ட்டுகளுக்கு மாற்றம் செய்து கோடிக்கணக்கில் பணம் கையாடப்பட்டதாக சிக்கிம் மாநில அரசு புகார் செய்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சிபிஐ விதிகளை மீறி சிக்கிம் மாநில லாட்டரி விற்றதன் மூலம் 910 கோடி ரூபாய் அளவுக்கு சிக்கிம் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கம் செய்தது. அந்த முடக்கத்தை அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. இதை எதிர்த்தும் சொத்து முடக்கத்தை நீக்க கோரியும் மார்ட்டின் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த மனுக்களில், சொத்துகளை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, சொத்துகளை விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: