பண மோசடி வழக்கில் பிடிக்க சென்றபோது எஸ்.ஐ. மீது நாயை ஏவி கடிக்க வைத்த தம்பதி: 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது

ஆரல்வாய்மொழி: பண மோசடி வழக்கில் விசாரிக்க சென்ற போலீசார் மீது நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் சிராயன்விளையை சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ் ராஜ் (31). ஜவுளி வியாபாரி. இவரது சித்தி மகள் கிருஷ்ணவேணி (25). இவர் கணவர் நாகசுமனுடன் (26) ஆரல்வாய்மொழி அருகே தோவாளை தேவர் நகர் பகுதியில் வசித்து வருகிறார். கிரேட் பிரின்ஸ் ராஜ், அடிக்கடி கிருஷ்ணவேணியை பார்க்க வருவார்.

இந்த நிலையில் கிரேட் பிரின்ஸ் ராஜ் ஜவுளிக்கடையில் நஷ்டம் ஏற்பட்டது. இதையறிந்த கிருஷ்ணவேணி அவரிடம், தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என்றும், மாமனார் சொத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாங்கித் தருவார் என்றும் கூறினார். இதற்காக கிரேட் பிரின்ஸ் ராஜிடம், ரூ. 5 லட்சத்து 93 ஆயிரத்து 390 பணம் மற்றும் ரூ.8 லட்சம் சொகுசு கார் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு நீதிமன்றத்தில் எந்த வழக்கும் தொடராமல் ஏமாற்றி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேகமடைந்த கிரேட் பிரின்ஸ் ராஜ் விசாரித்த போது, நாகசுமன் வழக்கறிஞரே இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அவர்கள் தர மறுக்கவே ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து காரை முதலில் பறிமுதல் செய்தனர். தம்பதியர் வீட்டில் இருப்பதை இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப் இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் அங்கு நேற்று முன்தினம் மாலை சென்றனர். அப்போது கிருஷ்ணவேணி போலீசாரை உள்ளே செல்ல விடாமல் தகாத வார்த்தையால் திட்டினார்.

மேலும் போலீசார் மீது வளர்ப்பு நாயை ஏவி உள்ளார். அந்த நாய், சப் இன்ஸ்பெக்டர் அனுஜனை திடீரென கடித்தது. இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. எனினும் போலீசார் கணவன், மனைவி இருவரையும் பிடித்து 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைதான நாகசுமன் மீது மதுரை தெப்பக்குளம், அண்ணா நகர் , நீலகிரி மாவட்டம் ஊட்டி, நெல்லை நாங்குநேரி , திருப்பூர் மடத்துக்குளம் காவல் நிலையங்களில் மோசடி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாகசுமன் உடல் நிலை சரியில்லை என்றும் கிருஷ்ணவேணி கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியதால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று நடந்த மருத்துவ பரிசோதனையில் கிருஷ்ணவேணி கர்ப்பம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் இருந்தனர்.

Related Stories: