மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தியதால் பைனான்ஸ் ஊழியரை கட்டிவைத்து தாக்கிய தவெக நிர்வாகி கைது

தாராபுரம்: நிதி நிறுவன ஊழியரை கட்டிவைத்து தாக்கிய தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஊழியர் ஆடம்பரமாக திருமணம் நடத்தியதால் இச்சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரெட்டாலவலசு சாலையை சேர்ந்தவர் ஜவாஹிர் (65). ஓபிஎஸ் அதிமுக அணியிலிருந்த இவர், தேர்தலுக்கு முன் தவெகவில் இணைந்து அக்கட்சியின் தாராபுரம் பகுதி நிர்வாகியாக உள்ளார். தூத்துக்குடியில் இவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிக்கும் ஊழியராக மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த சுதாகர் (50) என்பவர் பணிபுரிந்தார்.

இவருக்கு அனிதா(45) என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு நடந்த ஆடம்பர திருமணத்தில் ஜவாஹிர் பங்கேற்றார். அப்போது, தனது நிதி நிறுவனத்தில் வேலைசெய்யும் ஊழியர் ஆடம்பரமாக நிகழ்ச்சியை செய்திருக்கிறாரே, இதற்கான பணம் அவருக்கு எப்படி கிடைத்தது, தான் இல்லாதபோது நிதி நிறுவனத்தில் இருந்து பணத்தை திருடினாரா? என சந்தேகம் அடைந்து அவரது நடமாட்டத்தை ஆட்கள் மூலம் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுதாகரின் வீட்டிற்கு நேற்று வந்த ஒருவர், தவெக நிர்வாகி ஜவாஹிர் அழைத்து வரும்படி கூறியதாக காரில் ஏற்றி தாராபுரம் அடுத்த அலங்கியம் அருகே விவசாய தோட்டத்திற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சுதாகரை கட்டி வைத்து ஜவாஹிர் மற்றும் 7 பேர் பணத்தை திருடினாயா என கேட்டு கடுமையாக தாக்கினர்.

அவரது மனைவியிடமிருந்து 2 பவுன் நகையை பெற்றுக்கொண்டு சுதாகரை திருப்பி அனுப்பினர். படுகாயமடைந்த சுதாகர், உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்பேரில் தாராபுரம் போலீசார் ஜவாஹிரை கைது செய்தனர். நெஞ்சு வலி, மயக்கம் வருவதாகவும் கூறியதால் அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: