அறையின் கதவை பூட்டி மனஉளைச்சலுக்கு ஆளாக்கி மிரட்டினார் கட்சியில் யாராவது பிரபலமானால் அண்ணாமலைக்கு பிடிக்காது: பாஜ செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அக்கட்சியின் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் டெய்சி சரண், சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சியில் கட்சி பேனர் வைப்பதில் ஏற்பட்ட புரோட்டோகால் சர்ச்சையால் சூர்யா என்னை மிகவும் மோசமாகத் திட்டினார். இது ஒரு பெண்ணாக எனக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்த ஆடியோ ஆதாரத்துடன் கமலாலயத்தில் அப்போதைய தலைவர் அண்ணாமலையைச் சந்தித்தேன்.

அவர் என்னையும், திருச்சி சூர்யாவையும் ஒரே நேரத்தில் அழைத்து 40 நிமிடங்கள் பேசினார். ஆனால், என்னை அசிங்கமாகப் பேசிய சூர்யாவைத் தண்டிப்பதற்குப் பதிலாக, ‘உனக்கு நல்ல திறமை இருக்கிறது, உன்னை எம்பி ஆக்குவேன்’ என்று அண்ணாமலை என் முன்னாலேயே அவரைப் பாராட்டிப் புகழ்ந்தார். இறுதியில் சூர்யாவை ஒரு சாதாரண ‘சாரி’ கேட்க வைத்துவிட்டு விவகாரத்தை முடித்தார்.
​​
ஆடியோ மீடியாக்களுக்குக் கசிந்த அடுத்த நாள் காலையில், அண்ணாமலை தன்னைத் தனியாக அறைக்கு அழைத்து கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். ​அறையின் கதவை மூடிவிட்டு, ‘பிளடி’ என்ற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்தி, எப்படி ஆடியோவை ரெக்கார்ட் செய்தாய் என்று கத்தினார். சுமார் ஒன்னே முக்கால் மணி நேரம் (1 மணி நேரம் 45 நிமிடங்கள்) என்னை மிரட்டினார்.

ஒரு வெள்ளைத்தாளைத் தூக்கிப் போட்டு என்னை உடனே ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டினார். நான் மறுத்தபோது, சைக்கோவைப் போல பேப்பரில் கிறுக்கிக் கொண்டு, ‘உன்னை எங்கே ஓடவிட்டு அடிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என மிரட்டல் விடுத்தார். இத்தகைய கொடூரமான மிரட்டலால் எனக்கு லேசான நெஞ்சுவலியும், கண்ணீரும் வந்தது. கட்சியின் மூத்த தலைவரான கேசவ விநாயகத்தைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசினார்.

அங்கு வரும் நிர்வாகிகளைப் பயமுறுத்தி, உடற்பயிற்சி செய்ய வைத்து அவமானப்படுத்துவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.​ தொழிலதிபர்களைத் தனது தோட்டத்தில் ஒன்-டு-ஒன் சந்தித்துப் பேசி, அந்தப் பைல்களுக்கான விலை பேசப்பட்டு, அது புஸ்வாணமாகப் போய்விட்டது. அவர் உண்மையிலேயே மக்கள் தலைவராக இருந்தால், அந்தப் பணத்தை மீட்டிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்றால் அவர் விலை போய்விட்டார் என்றுதான் அர்த்தம்.

ஆடு வளர்க்கிறேன், விவசாயம் செய்கிறேன் என்ற போர்வையில் அவர் லண்டனில் சொத்து வாங்கும் அளவிற்குச் செழிப்பாகப் பணம் சேர்த்துள்ளார். கட்சியில் யாராவது பிரபலம் அடைந்தால் அண்ணாமலைக்குப் பிடிக்காது. காயத்ரி ரகுராம் போன்ற அர்ப்பணிப்புடன் வேலை செய்த பெண்ணைக் கூட, 250 ஆண்கள் இருந்த கூட்டத்தில் வைத்து ‘துபாய் ஹோட்டலில் என்ன நடந்தது என்று சொல்லிவிடுவேன்’ என்று கூறி மிகக் கேவலமாக அசிங்கப்படுத்தினார்.

இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிக் கட்சியை விட்டு வெளியேறினார். மாற்றுப் பாலினத்தவரைப் பயன்படுத்தி ஆடியோ, வீடியோ எடுத்து பிளாக்மெயில் செய்வதே அண்ணாமலையின் முக்கிய வேலையாக இருந்தது. சூர்யாவை மிரட்டுவதற்காக அலிஷாவை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தினார். நான் சொன்னது நடந்ததில் வெறும் 5 சதவீதம் மட்டும்தான் இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: