சென்னை: விமர்சனங்களை முடக்குவதில் மட்டுமே தவெக அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றை தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை. ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு செயல்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ? என்ன சிஎம் சார், உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
