பேச்சுக்குறை போக்கும் பத்ரகாளி அம்மன்!

வெளிர் நீல வானம் துரோகியாக மாறியதோ என்னவோ, அதனை எப்போதும் தழுவி மயங்கும் முகில்கள் பல காலமாக அதன் மீது படரவில்லை. வழக்கமாக வெண் மேகமாகப் பறந்து வந்து, வானத்தின் காதல் அரவணைப்பால் ‘கரு’ மேகமாக மாறி, அந்த சந்தோஷத்தை பேரருவியோ என்று வியக்கத்தக்க வகையில் மழையாய் பொழிந்து, உலகோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வித்தையையும் இயற்கை மறந்து போனதோ என்று மக்களை எண்ணி, ஏங்கி, வருந்த வைத்தது.

எத்தனை நாட்களுக்குதான் கையிருப்பு உணவும் தாக்குப் பிடிக்கும்? இருப்போர், இல்லாதோர்க்கு வழங்கும் ஈகை குணமும் வற்றி விட்டது! பாளம் பாளமாய் வெட்டுப்பட்டு, மென்மையான விவசாய நிலமும் பாறைத் தொகுதிகளாக இறுகி விட்டது. நிலைமை மாறும் என்ற நம்பிக்கையும் பொய்த்துவிட்டது. பஞ்சத்தாலும், பட்டினியாலும் உடல்கள் மெலிந்தனவே தவிர, உயிர் மட்டும் நீங்காதிருந்தது. இது இறைவன் எதற்கோ உத்தரவாதம் தருவதுபோலவே இருந்தது. ஆமாம், பொருத்திருங்கள் என்று சொல்வது போல.

ஆனால், இந்தக் கொடிய சூழலில் இறை நம்பிக்கையும் வலுவிழந்து போய்விட்டதால், சுய முயற்சியாலன்றி சாப்பாடு கிடைக்காது என்று ஊர் மக்களுக்குத் தோன்றிவிட்டது. ஒரு குளம் வற்றிவிட்டால் அதில் வாழும் மீன்கள் வேண்டுமானால் மாண்டு போகலாம்; ஆனால், அந்த நீர்நிலையில் தாகம் தீர்த்துக் கொள்ள வரும் பறவைகள் அங்கு அது இயலாது என்பதை உணர்ந்தால், வேறு நீர்நிலையை தேடிப் போய்விடுவதில்லையா, அதுபோல மக்களும் பசிபோக்கும் புரவலர்களைத் தேடி தம் ஊரை விட்டுப் புறப்பட்டார்கள். பிச்சை கோர வேண்டாம், ஏதாவது பணிபுரியலாம், அதற்கான ஊதியமாக உணவு பெறலாம் என்ற உயர் நோக்கத்துடனேயே அவர்கள் தம் ஊரைத் துறந்தார்கள்.

ஊரைத் துறந்தாலும், தம்முடைய சில அத்தியாவசியப் பொருட்களை அந்த வறண்ட நிலத்திலும், நீர்ப்பசை அற்ற வீட்டிலும் விட்டு விட்டு வராமல், கையோடு கொண்டு வந்தார்கள். சிலர் தலைச் சுமையாக, சிலர் தோள் சுமையாக, சிலர் கைப்பையாக…

அவர்களில் ஓர் இளம் பெண், சில பாத்திரங்களைக் கூடையில் வைத்துச் சுமந்து வந்து கொண்டிருந்தாள். வெகு தொலைவு வந்துவிட்ட பிறகு, தன் தலைச் சுமையின் பாரம் கூடுவதை அவள் உணர்ந்தாள். உணவின்றி, குடிநீரின்றி நடந்து வந்ததன் களைப்போ அது என்றும் அவளுக்குத் தோன்றியது. இல்லை, உடல் சலித்ததன் விளைவு அல்ல அது; நிச்சயமாகக் கூடுதல் பாரம்தான். உடனே தன்னுடன் வந்துகொண்டிருந்த இன்னொரு பெண்ணிடம், ‘‘என் தலைச் சுமையை இறக்கக் கொஞ்சம் கை கொடும்மா’’ என்று உதவி கோர, அவளும் உதவ, கூடையை இறக்கி வைத்தாள். உள்ளே, புதிதாக ஒரு பொருள் – ஒரு குழவிக்கல். அம்மிக் குழவி! இது

எப்படி இங்கே வந்தது? ஆச்சரியமாகத்தான் இருந்தது. வீட்டிலேயே தான் அதை எடுத்துக் கூடையில் போட்டுக் கொள்ளவும் இல்லையே…!சற்று முன்பாக ஆண்களுடன் போய்க் கொண்டிருந்த தன் கணவனை குரலெடுத்து அழைத்தாள். திரும்பிப் பார்த்துத் தன்னை நோக்கி வந்தவனிடம், அந்தக் குழவிக் கல்லைக் காண்பித்தாள். ‘‘இதை நான் எடுத்து வைக்கவே இல்லையே! ஆனால், திடீரென்று பாரம் மிகுந்ததால், கூடையை இறக்கிப் பார்க்க இந்தக் கல் உள்ளே இருக்கிறதே!’’ என்று தன் சந்தேகத்தையும் சொன்னாள்.

அவனோ வெகு அலட்சியமாக, ‘‘நீதான் வைத்திருப்பாய். மறந்து விட்டிருக்கிறாய். ரொம்பவும் களைப்பாக இருப்பதால் இதன் கனம் உனக்கு இப்போது பெரிதாகத் தெரிகிறது. கவலைப்படாதே, இன்னும் கொஞ்ச தூரம்தான். வெகு தொலைவில் கொஞ்சம் பச்சை கண்ணுக்குத் தெரிகிறது. அங்கே நம் தாகத்துக்கு, பசிக்கும், தொடரும் வாழ்க்கைக்கும் ஏதேனும் விடை கிடைக்கும். வா,’’ என்று ஆறுதலாகச் சொன்னான்.

ஆனால், அவளுக்கு இன்னமும் சந்தேகம் தீரவில்லை. ‘இல்லை, நான் எடுத்து வரவேயில்லை,’ என்றே சாதித்தாள். சற்றே பொறுமையிழந்த கணவன், ‘‘சரி, தானாகவே வந்து உட்கார்ந்து கொண்டதாக இருக்கட்டும், ஆனால், இப்போது அது உனக்குக் கூடுதல் பாரம்தானே? ஆகவே அதைத் தூக்கி ஓரமாக எறிந்துவிட்டு வா. பளுவும் குறைந்தாற் போலாகும்,’’ என்று யோசனை சொன்னான். அவளும் அரை மனதுடன் அதை பாதை ஓரமாகப் போட்டுவிட்டு பிறருடன் நடைப் பயணத்தைத் தொடர்ந்தாள்.

கொஞ்ச தூரம்கூட சென்றிருக்க மாட்டாள். இப்போது மறுபடியும் கூடையில் பாரம்! அவள் திடுக்கிட்டாள். கூடையைக் கீழே இறக்கி வைத்தாள். உள்ளே, மீண்டும் அதே குழவிக்கல்! கணவனை மட்டுமல்லாமல் பிற அனைவரையும் அழைத்து அந்த ‘அதிசய’த்தை அவள் விளக்க எல்லோருக்குமே நெஞ்சில் கொஞ்சம் அச்சம் படர்ந்தது. இது ஏதேனும் செய்வினையாக இருக்குமோ? ஏற்கெனவே தம் ஊரில் நிலவும் பஞ்சத்துக்கும், இந்தக் குழவிக் கல்லுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? யார் அவர் தங்கள் ஊருக்கே வேண்டாதவர், தங்களை பகையாக நினைப்பவர்?

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. கணவன்தான் அந்தக் கல்லை எடுத்து பக்கத்தில் பள்ளத்தை மூடியிருந்த ஒரு புதருக்குள் போட்டான். மர்மமாய் மனசில் ஏதோ கிலி கவ்வ எல்லோரும் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இப்போது அந்தப் பெண்ணின் கூடையில் அந்தக் கூடுதல் பாரம் தெரியவில்லை. ஓரளவுக்கு நிம்மதியாயிற்று. பில்லி, சூனிய பாதிப்பு ஏதேனும் இருந்து, விலகிவிட்டதோ?அனைவரும், அத்தனூர் என்ற பகுதிக்கு வந்தார்கள். அங்கே காட்சி தந்த மலையின் அடியில் அன்றிரவைக் கழிப்பதற்காகத் தங்கினார்கள். வயிற்றில் பசி புரண்டு கொண்டிருக்க, உறக்கம் அவர்களை நெருங்கவே உற்சாகம் அற்று இருந்தது.

ஏதோ மயக்க நிலை. அரைகுறையாகத் தூங்குவது போல பாவனை. புரண்டு புரண்டு படுத்த கணவனின் மயக்கக் கனவில், ஒரு குரல் கேட்டது: ‘‘நான் வெறும் குழவிக்கல் அல்ல. உன் குடும்பத்து குலதெய்வம். என்னை மட்டும் அங்கே விட்டு விட்டு நீங்கள் புறப்பட்டு வந்து விட்டீர்களே, இது நியாயமா? கஷ்டமோ, நஷ்டமோ, சுகமோ, இன்பமோ உங்களோடு கூடவே இருந்தவள்தானே நான்? இப்போது மட்டும் ஏன் என்னைப் புறந்தள்ளுகிறீர்கள்? அதனால்தான் நானே புறப்பட்டு உங்களுடன் வந்துவிட்டேன்…!’’திகைத்து, எழுந்து உட்கார்ந்தான் கணவன். அந்தக் குழவிக்கல் மனைவி உணவுத் தயாரிப்பின் போது பயன்படுத்துவது. அதுவேவா குலதெய்வம்? அல்லது அந்த வடிவத்துக்குள் புகுந்து கொண்டு அமானுஷ்யமாகக் கூடவே வந்திருக்கிறதா? உடனே தன்னைப் போலவே உறக்கம் இன்றி, வெறும் கிறக்கத்திலேயே ஆழ்ந்திருந்த பிறரிடம் இந்தத் தகவலைச் சொன்னான்.

‘அட, இது என்ன அதிசயம்? பஞ்சம் பிழைப்பதற்காக குல தெய்வமும் தங்களுடன் புறப்பட்டு வந்து விட்டதா!’ என்று ஆளாளுக்கு சந்தேக அவநம்பிக்கையை பகிர்ந்து கொண்டார்கள். அப்போதே போய் அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வந்துவிடும்படி, சுமந்து வந்த பெண், தன் கணவனிடம் கேட்டுக் கொண்டாள். அவள் குரலில் ஏதோ தெய்வீகம் ஒளிர்வதை உணர்ந்த மற்றவர்களும் அவ்வாறே அவனை வற்புறுத்தினார்கள்.அவனும் புறப்பட யத்தனித்தான். அப்போது அவன் மனைவி, ‘‘என்னாங்க, என்ன அதிசயம் பாருங்க, நீங்க அந்தக் குழவிக்கல்லைத் தேடிகிட்டுப் போக வேண்டாம். அது இங்கேயே, என் கூடையிலேயே பழையபடி இருக்குது,’’ என்று ஆச்சரியக் கூச்சல் போட்டாள்.

ஆமாம், புதரில் இடப்பட்ட அந்தக் கல் புதிராக மீண்டும் கூடைக்குள்ளேயே அமர்ந்திருந்தது! அந்தக் கல்லிலிருந்து புதுமையான ஒளி பரவுவது போலவும் அவர்கள் உணர்ந்தார்கள். அவர்களை ஆமோதிப்பது போல மண்வாசனையுடன் மழைச்சாரல் அவர்கள் மீது விழுந்தது. இந்த தெய்வச் செயலில் அவர்களுடைய புது வாழ்வுக்கான ஏதோ சமிக்ஞை தெரிவதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். குழுவிலிருந்த பெரியவர்கள், ‘‘நம்மை கைவிட்டு விடாமல் நம்மோடு தொடர்ந்து வந்திருக்கும் இந்த குலதெய்வத்துக்கு இங்கேயே கோயில் அமைத்து விடுவோம். நாமும் இங்கேயே தங்கிவிடுவோம். இப்போது கடவுள் ஆசிர்வாதமாக நம் மீது விழும் மழைத்துளி பெரிதாகும், இந்த நிலத்தை வளமாக்கும். நாம் இந்த இயற்கைக் கொடையை பயன்படுத்திக் கொள்வோம்’ என்று தங்களுக்குள் பேசி முடிவெடுத்தார்கள்.

அவர்களுடைய யோசனைப்படி, அந்தக் கல்லை, குலதெய்வமான பத்ரகாளியாகவே பாவித்து வணங்கினார்கள். அந்த மலையடிவாரத்திலேயே அதனை நட்டு, அதற்கு மலர்கள் தூவி வழிபாடுகளை மேற்கொண்டார்கள். அதுவே அத்தனூர் பத்ரகாளி அம்மன் கோயிலாக இப்போது கம்பீரமாக நிற்கிறது. ஆனால், குழவிக்கல்லுக்கு பதிலாக சிற்பம் என்ற அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கிராமவாசிகளுக்குப் பிறகு அவர்களுடைய வழித்தோன்றல்களும் பத்ரகாளி அம்மனைத் தங்கள் குல தெய்வமாகப் போற்றி வழிபட்டு வந்ததால், ஒற்றைக் கல் கோயில் இப்போது பல தெய்வங்கள் உறையும் பெரிய கோயிலாக உருமாறி விட்டது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் இது என்று புராதன மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

கோயிலில், பத்ரகாளி அம்மனின் வலது பக்கத்தில் உக்ரகாளியம்மனும் தரிசனம் அருள்கிறாள். இந்த இரு அம்மன்களும் ஒரே கல்லில் அமைந்திருக்கிறார்கள். அம்மனுக்கு இடப்புறம் பைரவர் வீற்றிருக்கிறார். வலப்புறம் அன்னப்பறவை காணப்படுகிறது. அம்மனுக்கு அடுத்து சடாமுனியும், கோரமுனியும் இருக்கிறார்கள். கோரமுனிக்கு கீழே லாடசந்நியாசிகள் மூவர் உள்ளனர். அடுத்து தனி சந்நதியில் முத்து முனியப்பனை தரிசிக்கலாம்.

இவரை ‘வேல் விலங்கு’ கொண்டு வழிபட்டால் பில்லி, சூனியம், காத்து, கருப்பு முதலான பாதிப்புகள் விலகிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. அம்மனின் வெளிப்பிராகாரத்தில் இடது பக்கம் விஜய துர்க்கை, வலது பக்கம் விஷ்ணு துர்க்கை, அம்மனின் பின்புறம் வராகி துர்க்கை என்று மூன்று துர்க்கைகளை தரிசிக்கலாம். அடுத்து மஹாமுனி மற்றும் ராஜமுனிகளை காணலாம். நவகிரகங்களுக்கும் இக்கோயிலில் தனி சந்நதி உள்ளது.

கோயிலின் மூலவராக விளங்கும் பத்ரகாளிக்கு (உற்சவராகவும் உலோகத்தால் ஆன பத்ரகாளி திருவுருவமும் இக்கோயிலில் இடம் பெற்றிருக்கிறது.) எதிரில் மூன்று குதிரைகள் நின்றிருக்கின்றன. இவற்றின் இடப்பக்கத்தில் கத்தியால் தனது கழுத்தில் குத்திக் கொண்டு நிற்கும் சர்வேஸ்வரர் என்ற பெயர் கொண்ட ஒரு பணியாளரின் சிலை வடிவம் உள்ளது. தனது எஜமானுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால், தான் வேண்டிக் கொண்டபடி தன் கழுத்தை அறுத்துக் கொண்டாராம் அவர்! அந்தக் காட்சிதான் இங்கே சிலை வடிவாகக் காணப்படுகிறது. அம்மனுக்கு இடப்பக்கத்தில் நவ சுப்ரமணியர்களும், காவல் தெய்வமும் அருள்கின்றனர்.

பூப்போடுதல் முறையில் அம்மனிடம் வாக்கு கேட்கும் சம்பிரதாயமும் இங்கே உண்டு. பேச்சுக் குறை, கேட்கும் திறன் குறைபாடு போக்கியும், குழந்தைப் பேறு இல்லாதோருக்கு அந்த வரம் ஈந்தும், வம்சம் தழைக்க அருள்புரிகிறாள் பத்ரகாளி. துர்காற்று, பில்லி, சூனிய பாதிப்புகளிலிருந்தும் இந்த அம்மன் பக்தர்களை மீட்கிறாள். இருபத்தோரு தலைமுறை பாபங்களையும் போக்க வல்லவள் இந்த அத்தனூர் அம்மன் என்று சொல்லி வியக்கிறார்கள் பக்தர்கள். இக்கோயிலில் சித்திரை மாதத் தேர்த் திருவிழாவும், பங்குனி உத்திர விழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.சேலம்-நாமக்கல் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது அத்தனூர்.

ப்ரபுசங்கர்

 

Related Stories: