மளிகை வியாபாரி உட்பட 2 பேர் பலி

சேந்தமங்கலம்,  மார்ச் 7: கொல்லிமலையில் டூவீலர் மீது டூரிஸ்ட் வேன் மோதியதில், மளிகை  வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர  சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை  அரியூர்நாடு மேல்கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(37), மளிகை  கடை நடத்தி வந்தார். இவரது உறவினர்கள் பாலகிருஷ்ணன்(40), கஜேந்திரன் (49)  ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, ஒரே டூவீலரில் 3  பேரும் அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு,  மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தனர். வழியில் தொம்பளம் ஓசாணி நகர்  என்ற இடத்தில், வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே ராணிப்பேட்டையில்  இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா வந்த டூரிஸ்ட் வேன், செந்தில்குமாரின்  டூவீலர் மீது நேருக்குநேர் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி  வீசப்பட்ட செந்தில்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய  இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த கஜேந்திரனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள  தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.  விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  வாழவந்திநாடு போலீசார், பலியான இருவரின் உடலை கைப்பற்றி,  பிரேத பரிசோதனைக்காக சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உயிரிழந்த செந்தில்குமாருக்கு ரத்தினம் என்ற மனைவியும் ஒரு மகன், மகள்  உள்ளனர். பாலகிருஷ்ணனுக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும்  உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய டூரிஸ்ட் வேன் டிரைவரான ராணிப்பேட்டையை சேர்ந்த  முத்துசெல்வன்(40) என்பவரை கைது செய்தனர். கோயிலுக்கு சென்று வந்த 2  பேர், வேன் மோதி இறந்த சம்பவம், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: