புதுடெல்லி: ‘ சிபிஎஸ்இ 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் டிஜிட்டல் மதிப்பீட்டு முறையான ஓஎஸ்எம் சேவைக்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய 18 வயது மாணவர் சர்தாக் சித்தாந்துடன் கடந்த வாரம் நடந்த சந்திப்பு வீடியோவை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்து பதிவிட்டதாவது:
சர்தாக்கிற்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனாலும், மனப்பான்மை, துணிச்சல் மற்றும் கொள்கைகளில் அவர் யாருக்கும் சளைத்தவர் அல்ல. நாட்டின் முன்னணி ஊடக நிறுவனங்களாலும் புலனாய்வு பத்திரிகையாளர்களாலும் கூடச் செய்ய முடியாத ஒன்றை அவரும் அவரது நண்பர் நிசர்காவும் சாதித்துள்ளனர். சிபிஎஸ்இ மற்றும் கோஎம்ப்ட் நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு சதியை அம்பலப்படுத்தி உள்ளனர்.
இளைஞர்களின் இந்த வெற்றி, அரசாங்கத்திற்கு கிடைத்த தோல்வி. கேள்விகள் கேட்காமலும் கண்களைத் திறக்காமலும் நமது இளைஞர்கள் தொடர்ந்து ரீல்ஸ் செய்யவும் பக்கோடா விற்கவும் வேண்டும் என்று மோடி விரும்புகிறார். ஆனால் இந்த இளைஞர்கள் கேள்விகளை கேட்டனர். அதற்கான விடைகளையும் கண்டறிந்தனர். இதுதான் இந்தியாவின் உண்மையான இளைஞர் சக்தி. எதையும் அறியும் ஆர்வம் கொண்ட, விழிப்புணர்வுள்ள மற்றும் தகவலறிந்த சக்தி. நினைவில் கொள்ளுங்கள், நாட்டின் எதிர்காலம் தவறான பாதையில் செல்லாது. இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
