முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தயவால்தான் ஆட்சி நடக்கிறது; அறிவுகெட்ட ஆதவ் அர்ஜூனாவுக்கும், தவெக ஆட்சிக்கும் விரைவில் முற்றுப்புள்ளி: அதிமுக கொறடா திட்டவட்டம்

​செங்கம்: அறிவுகெட்ட ஆதவ் அர்ஜூனாவுக்கும், தவெக ஆட்சிக்கும் விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என அதிமுக கொறடா எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ பேசினார். ​திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் அதிமுக கொறடா எஸ்.எஸ்.அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:
தவெகவில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஆதவ் அர்ஜூனா, பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டு தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளார். இவருக்கு எந்தவித தகுதியும் கிடையாது. திமுகவின் ஆதரவோடு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு, குதிரை பேரம் நடத்தி பதவி ஆசையோடு தமிழ்நாட்டில் இவர்கள் ஆட்சி அமைத்துள்ளனர்.

​முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தயவால்தான் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் நினைக்கும் வரை மட்டுமே இந்த ஆட்சி நீடிக்க முடியும். நேற்று முன்தினம் கூட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தவெக ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசு ஆறு மாத காலத்திற்கு மேல் நிலைக்காது என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும் கருதுகின்றனர்.

அரசியலில் ‘அ, ஆ’ கூட தெரியாத ஒரு தற்குறியாக ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருகிறார். கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விவசாயத்தை விட விளையாட்டுத்துறை மிகவும் கடினமானது என்று கூறியுள்ளார். விவசாயத்தின் அருமை தெரியாமல், விவசாயிகளை இழிவுபடுத்தும் நோக்கில் பேசிய ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும், சாதாரண விவசாயிகளும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ​தமிழ்நாடு தற்போது லாட்டரி மாபியாக்களின் பிடியில் சிக்கியுள்ளது. தவெக-வின் இந்த தரமற்ற ஆட்சியால் ஒரே மாதத்தில் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினம்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. ​மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் அறிவு கெட்டத்தனமாகத் தொடர்ந்து பேசி வரும் ஆதவ் அர்ஜூனாவிற்கும், இந்த ஆட்சிக்கும் தமிழ்நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சியை தமிழக மக்கள் விரைவில் தூக்கி எறிவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: