ஆரணி அருகே போலீசார் அதிரடி மண் கடத்திய 6 பேர் கைது ஜேசிபி, 5 டிராக்டர்கள் பறிமுதல்

ஆரணி, மார்ச் 6: ஆரணி அருகே மொரம்பு மண் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஜேசிபி மற்றும் 5 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். ஆரணி அடுத்த களம்பூர் வட்டார பகுதிகளில் மொரம்பு மண் மற்றும் மணல் கடத்தல் நடப்பதாக களம்பூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, களம்பூர் எஸ்ஐ ஏழுமலை மற்றும் போலீசார் வடமாதிமங்கலம், சதுப்பேரி ஆகிய கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சதுப்பேரி கிராமத்தில் வேலு என்பவரது விவசாய நிலத்தில் ஜேசிபி மூலம் டிராக்டரில் சிலர் மொரம்பு மண்ணை அள்ளிக்கொண்டிருந்தனர். விசாரணையில், மொரம்பு மண்ணை கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மண் கடத்துவதற்கு பயன்படுத்திய ஜேசிபி மற்றும் 5 டிராக்டர்களை பறிமுதல் செய்து, களம்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், மண் கடத்தியது தொடர்பாக சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த கார்த்தி(35), புகழேந்தி(23), மனோகரன்(28), பரத்(23), பழனி(40), படவேடு வேட்டகிரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஜேசிபி டிரைவர் ராமு(21) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர், அவர்களை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>