ஐநா: ‘ஐநா பாதுகாப்பு சபை, பாரபட்சமான, பொய்யான கருத்துக்களை பரப்பும் இடமல்ல’ என பாகிஸ்தானை இந்தியா கண்டித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளை தவிர சுழற்சி முறையில் 10 நாடுகள் நிரந்தமற்ற நாடுகளாக 2 ஆண்டுகள் பதவி வகிக்கும். அந்த வகையில் தற்போது நிரந்தரமற்ற உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதற்கிடையே, நேற்று முன்தினம் நடந்த ஐநா பாதுகாப்பு சபையின் ஆண்டு அறிக்கை மீதான விவாதத்தின் போது ஐநாவிற்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி தூதர் ஆசியம் இப்திகார் அகமது, காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி பேசினார்.
இதற்கு ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் நேற்று கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரிவினைவாத அரசியல் நோக்கங்களுக்காக ஐநாவின் கண்ணியமான தளங்களை தவறாக பயன்படுத்தும் தனது வழக்கமான பாணியிலிருந்து ஐநா பாதுகாப்பு சபையையும் பாகிஸ்தான் விட்டுவைக்கவில்லை. பாதுகாப்பு சபையிலும் தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி தவறான தகவல்கள் மற்றும் மக்களை திசை திருப்பும் வகையிலான கருத்துக்களை பரப்ப முயன்றுள்ளது.
ஐநா பாதுகாப்பு சபையில் உறுப்பினராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதை பாகிஸ்தானுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இது பாரபட்சமான, பொய்யான கருத்துக்களை பரப்பும் இடமல்ல. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். இதற்கு முரணான எந்தவொரு கூற்றும் ஆதாரமற்றது. வரலாற்று உண்மைகளுக்கு புறம்பானது. பாகிஸ்தானின் வெற்று பேச்சுக்களோ ஆதாரமற்ற கூற்றுக்களோ இந்த அடிப்படை உண்மையை மாற்றிவிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
