தீவிரமடையும் நெருக்கடிகள் பொருளாதார நிலை குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: தீவிரமடையும் உலகளாவிய நெருக்கடி சூழலுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக, தனது பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா-ஈரான் இடையேயான போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து உலகளவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், எரிவாயு தட்டுப்பாடு அபாயமும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஈரான் போருக்குப் பிறகு, 4 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 10 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இதனால் இந்தியா வரலாறு காணாத பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த சூழலில், பிரதமர் மோடி தனது பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில், பொருளாதார ஆலோசனைக் குழுவினருடன் பிரதமரின் முதன்மை செயலாளர்களான பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மேற்கு ஆசியாவில் நிலவும் போரால் இந்தியா மற்றும் உலக நாடுகள் மீது ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்த தங்கள் மதிப்பீடுகளை பொருளாதார குழுவினர் பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தினர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உலகளாவிய நெருக்கடியான சூழலிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிப்பதற்கான பல்வேறு யோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை பொருளாதார குழு பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஆலோசனை கூட்டத்தில், நாட்டின் பொருளாதார மாற்றம் மற்றும் நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகள் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேலும் வேகப்படுத்துவது, எளிதான வாழ்க்கை, எளிதாக தொழில் தொடங்குதல், நடத்துதல் ஆகியவற்றை உறுதி செய்வது குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டேன்’’ என கூறி உள்ளார்.

  • பொருளாதார ஆலோசனைக் குழு என்பது அரசுக்கு குறிப்பாக பிரதமருக்கு பொருளாதாரம் மற்றும் அது தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வழங்கும் தன்னாட்சி அமைப்பு.
  •  இந்த குழு, பிரதமர் குறிப்பிடும் பொருளாதாரம் அல்லது அது சாராத எந்ததொரு விஷயத்தையும் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கும்.
  •  பொருளாதாரம் சார்ந்த முக்கிய பிரச்னைகளை கையாளுதல், அது குறித்த எச்சரிக்கைகளை பிரதமரிடம் சமர்பிக்கும்.

Related Stories: