திருச்செங்கோடு, நாமகிரிப்பேட்டையில் வியாபாரிகளிடம் ₹7.38 லட்சம் பறிமுதல்

திருச்செங்கோடு, மார்ச் 6: திருச்செங்கோட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய வாகன தணிக்கையில், ஆவணங்கள் இல்லாமல் கோழித்தீவனம் மற்றும் பூ வியாபாரி ஆகியோர் எடுத்துச்சென்ற ₹3.38 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன், நேற்று தனது குழுவினருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது ஈரோட்டில் இருந்து வந்த மினி ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ₹2.45 லட்சம் பணம்  இருந்தது. இதுகுறித்து ஆட்டோவில் வந்த பழனிசாமி, தினேஷ் மற்றும் விஜய் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் நாமக்கல்லில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வருவதாகவும், முதலாளி வசூல்செய்த பணத்தை கொண்டு வருமாறு கூறியதால், எடுத்து செல்வதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்து, திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில்  ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல், நேற்று காலை பொம்மக்கல்பாளையம் என்ற இடத்தில், காரில் வந்த நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீதர்(33) என்ற  கோழித்தீவன வியாபாரியிடம் இருந்து ₹93 ஆயிரத்து 500 பிடிபட்டது. ஈரோட்டில் மக்காச்சோளம் வாங்கியதற்கான பணத்தை கொடுத்து விட்டு, மீதியை கொண்டு வந்ததாக ஸ்ரீதர் தெரிவித்தார். ஆனால் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், பறக்கும்படையின் பணத்தை பறிமுதல் செய்தனர். ஆவணங்களை வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ளும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டை அடுத்த தண்ணீர்பந்தல்காடு பகுதியில், சேந்தமங்கலம் தொகுதி தேர்தல் பறக்கும்படை ராமமூர்த்தி தலைமையிலான குழுவினர், நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், ஆவணமின்றி ₹4 லட்சம் ரொக்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், தலைவாசலை சேர்ந்த முட்டை வியாபாரி ராமமூர்த்தி என்பதும், நாமக்கல்லில் முட்டை வாங்க லாரியில் ₹4  லட்சத்தை எடுத்து வந்ததாக தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால், ₹4 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, ராசிபுரம் உதவி தேர்தல் அலுவலர் பாஸ்கரிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்து, பணத்தை பெற்றுச்செல்லுமாறு ராமமூர்த்தியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>