பட்டா வழங்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

ஊத்தங்கரை, மார்ச் 6: ஊத்தங்கரை அருகே பட்டா வழங்காததை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் ஊராட்சி, வடுகனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பட்டா கேட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஊத்தங்கரை தேர்தல் துணை பொறுப்பாளரும், தாசில்தாருமான ஆஞ்சநேயலு, பயிற்சி டிஎஸ்பி ஹரிசங்கரி மற்றும் போலீசார் சென்று, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், தேர்தல் முடிந்து ஏப்ரல் 10ம் தேதி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்தார். அதனை ஏற்று, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories: