நாகர்கோவில்: மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் அதி வேக ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் மற்றும் ரயில்வே ஆர்வலர்கள் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் , ரயில்வே துறை சார்பில் இயக்கப்படும் அதி வேக ரயிலான வந்தே பாரத் ரயில் பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் சென்னை – நாகர்கோவில், சென்னை – திருநெல்வேலி, மதுரை – பெங்களூரு, சென்னை – கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் மதுரை – பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது மதுரையிலிருந்து திண்டுக்கல், திருச்சி, சேலம் வழியாக பெங்களூரு வரை இயக்கப்படும் இந்த ரயில் சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் மற்றும் வணிகர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் திரும்ப தற்போதுள்ள ரயில்களில் முன்பதிவு கிடைப்பது மிகக் கடினமாக உள்ளது. தற்போது இவர்களுக்கு இரண்டு தினசரி ரயில்களே உள்ளன.
அதாவது நாகர்கோவில் – பெங்களூரு மற்றும் மைசூர் – தூத்துக்குடி ஆகியவை மட்டுமே உள்ளன. நாகர்கோவிலில் இருந்து இரவு 9.55 மணிக்கு கோவை செல்லும் ரயில் புறப்பட்டால், அடுத்து மறுநாள், காலை 6.30 மணிக்கு தான் குருவாயூர் – சென்னை ரயில் உள்ளது. இந்த இடைப்பட்ட 8 மணி நேரத்தில், கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்குச் செல்ல எந்த ஒரு ரயில் சேவையும் இல்லை. மதுரை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டால், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தற்போது மதுரை – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான ரயில் பாதை மின்மயமாக்கலுடன் கூடிய இருவழிப்பாதையாக உள்ளன.
மதுரை வரை வந்து சேரும் வந்தே பாரத் ரயிலை, வெறும் 230 கி.மீ தொலைவில் உள்ள நாகர்கோவில் வரை நீட்டிப்பது பெரிய கடினமான காரியம் அல்ல. மதுரை – பெங்களூரு ரயிலின் கால அட்டவணையைச் சற்று மாற்றியமைத்தால், குமரி மாவட்ட மக்கள் பெங்களூருக்கு அதிவேகமாகச் சென்று வர இது வரப்பிரசாதமாக அமையும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிலையில், பெங்களூரு ரயிலையும் நீட்டிப்பதன் மூலம் தென் தமிழகத்தின் ரயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய மைல்கல் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரிலிருந்து இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கடந்த நிதியாண்டில் மற்ற வந்தேபாரத ரயில்களை காட்டிலும் மிகவும் குறைவான வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த ரயில் பெங்களூரு – மதுரை மார்க்கத்தில் 312 முறை பயணம் செய்து 78.9 சதவிகிதம் என்ற முன்பதிவைப் பெற்று, 2.1 லட்சம் பயணிகள் பயணம் செய்ததன் மூலம் 26.9 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. மறு மார்க்கமாக மதுரை பெங்களூரு மார்க்கத்தில் இந்த ரயில் 312 முறை பயணம் செய்து 68.5 சதவிகிதம் முன்பதிவு பெற்று, 1.9 லட்சம் பயணிகள் பயணம் செய்ததன் மூலம் 22.3 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.
இந்த மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யும் பட்சத்தில், அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து புறப்படும் படியாக இயக்கப்பட்டு, பெங்களூருக்கு தற்போது செல்லும் நேரமான மதியம் 1 மணிக்குச் சென்றடையும். இந்த ரயில் மறுமார்க்கமாக பெங்களூரிலிருந்து தற்போது புறப்படும் நேரமான மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, நாகர்கோவிலுக்கு இரவு 10 மணிக்கு வந்து சேருமாறு கால அட்டவணை அமையும். இவ்வாறு இயக்கும் போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்ல ஒரு சிறந்த ரயில் வசதி கிடைக்கும் என்று பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.
தெற்கு ரயில்வே கையில் முடிவு
இந்த ரயிலை நீட்டிப்பது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் நேரடியாக குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதற்குப் பதில் அளித்த பெங்களூரு கோட்ட அதிகாரிகள், இந்த ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த ரயிலை நீட்டிப்பு செய்வதற்கு தங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறி உள்ளனர். ஆகவே தெற்கு ரயில்வே அதிகாரிகள் குறிப்பாக திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் மதுரை – பெங்களுர் வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
