திசையன்விளை: நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பல்வேறு கடைகளில் பொருட்களை வாங்கிவிட்டு, கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்புவது போல் நாடகமாடி, பணம் செலுத்தாமல் பொருட்களுடன் தப்பிச் சென்ற இரு இளைஞர்களின் செயல் வியாபாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளை பஜார் பகுதி, உடன்குடி சாலையில் உள்ள ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் கடை, தெற்கு பஜாரில் உள்ள பிஎம்சி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் ஸ்கூல் பேக் மற்றும் லெதர் பேக் கடை, திசையன்விளை – நாங்குநேரி மெயின் ரோடு அஞ்சல் அலுவலகம் அருகில் உள்ள மளிகைக் கடை உள்ளிட்ட இடங்களில் ஒரே முறையில் இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் கடையின் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, தனது செல்போனில் பணம் அனுப்புவது போல் செயல்பட்டுள்ளார். இதற்கிடையில் மற்றொருவர் கடைக்குள் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர், “பணம் அனுப்பிவிட்டோம்” எனக் கூறி, செல்போன் திரையில் பணம் அனுப்பப்பட்டதாக தோன்றும் டிஜிட்டல் திரையை மட்டுமே கடைக்காரர்களிடம் காண்பித்துள்ளனர்.மேலும், கியூஆர் கோடை ஸ்கேன் செய்தபின் கடைக்காரரின் பெயரை உறுதிப்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதால், பணம் அனுப்பப்பட்டதாக வியாபாரிகள் நம்பியுள்ளனர். இதையடுத்து பொருட்களை பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து விரைவாக புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வியாபாரிகள் தங்களது வங்கி கணக்கு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளில் பணம் வரவு பதிவாகியுள்ளதா என சரிபார்த்தபோது, எந்தத் தொகையும் வரவு வைக்கப்படாதது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் மற்ற வியாபாரிகளிடம் விசாரித்தபோது, இதே நபர்கள் பல கடைகளில் இதுபோன்ற முறையில் மோசடி செய்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் திசையன்விளை பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி விட்டு பைக்கில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை அடையாளம் கண்டு கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திசையன்விளை பகுதியில் போலீசாரின் கண்காணிப்பை பலப்படுத்தி, இதுபோன்ற டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
