முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற 2 நாளில் கர்நாடகா மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா

 

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆண்டுகளாக சித்தராமையா முதல்வராக இருந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி சித்தராமையா, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அடுத்த முதல்வராக தேர்வானார். அவர், கடந்த 3ம் தேதி மாலை 4 மணியளவில் முதல்வராக பதவியேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வரானார். மற்ற 12 பேரும் அமைச்சர்களாக தொடர்ந்தனர். இதில் பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியில் வென்று எம்எல்ஏவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்க ரெட்டியும் அடங்குவார்.

இவர் அமைச்சராக பதவியேற்றார். நேற்று, அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது. இதனால் ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தியடைந்தார். ஏனென்றால் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி தருவதாக முதல்வர் டி.கே.சிவக்குமார் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி பதவி வழங்கப்படாததால், அதிருப்தியடைந்த ராமலிங்க ரெட்டி, இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

வெறும் காங்கிரஸ் எம்எல்ஏவாக தொடருவதாக அறிவித்துள்ளார். பதவியேற்ற 2 நாளிலேயே ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது என்பது புதிதாக முதல்வராக பதவியேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு விழுந்த முதல் அடியாக பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: