மண்டப, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை

திருப்பூர், மார்ச் 6: திருப்பூர் தெற்கு சட்டமன்றத்தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் கூறியுள்ளதாவது: திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எல்லைக்கு உட்பட்ட மண்டபங்களில் தனி நபர்களால் திருமண நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் முடியும் வரை முன்பதிவு செய்யப்பட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் அரசியல் கட்சியினரால் வாக்காளர்களுக்கு விருந்தளித்தல், பரிசு பொருட்கள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது. திருமண மண்டபங்களில் அன்னதானம் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது. திருமண நிகழ்ச்சிகளின் போது அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி சின்னங்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் கூடிய விளம்பர பேனர்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை திருமண மண்டபங்களில் வைப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. மேற்கண்ட நடவடிக்கைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீ்ழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேபோல், அச்சக உரிமையாளர்கள் தாங்கள் அச்சிடும் துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள், விளம்பரங்கள் மற்றும் இதர இனங்களின் தங்களது அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி, விளம்பரம் வெளியிடுவோரின் பெயர் மற்றும் முகவரி, வெளியிடப்படும் விளம்பரத்தின் பிரதிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை தவறாமல் அச்சிட வேண்டும். அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள், விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் இதர இனங்களின் அச்சிட்ட பத்து நகல்களை உறுதி மொழியுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>