ரூ.25 லட்சம் மோசடி, அமைச்சரிடம் லஞ்சம் திருச்செந்தூர் கோயில் அதிகாரிகள் மாற்றம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட்டில் ரூ.25 லட்சம் மோசடி மற்றும் அமைச்சரிடம் லஞ்சம் வாங்கிய விவகாரம் சர்ச்சையான நிலையில் இணை மற்றும் உதவி ஆணையர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அமைச்சரின் உதவியாளரிடமே பேரம் பேசி அர்ச்சகர் ஒருவர் தரிசனத்திற்கு பணம் பெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த மே 14ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் ரூ. 100 டிக்கெட் முறையில் போலி டிக்கெட் வழங்கி சுமார் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக மேனகா என்ற பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது கோயில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் நிர்வாகம் மீது அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் திருச்செந்தூர் கோயிலின் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக ஆணையர்களை நியமித்து அறநிலையத்துறை ஆணையர் வினய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி சென்னை, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் லோகநாதன் திருச்செந்தூர் கோயிலுக்கும், திருச்செந்தூர் கோயில் உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் கோயிலில் காலியாக இருந்த துணை ஆணையர் பதவிக்கு திருச்சி துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலராக இருந்த யக்ஞ நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: