சென்னை: அரசுப் பள்ளி குழந்தைகளிடம், முதல்வர் விஜய்யை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நன்றாக படிப்பீர்கள் என தவெகவினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இது பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி வேண்பாக்கம் கிராமத்தில் அரசு ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது.
இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறந்ததால் ஆர்வமுடன் பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் வந்தனர். இந்நிலையில், காலை 9 மணியளவில் ஒன்றாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. காலை இறைவணக்கம் துவங்கி முடிந்தவுடன் அங்கு தயாராக இருந்த தவெகவினர் மாணவர்களை பள்ளி வகுப்பறைக்கு செல்ல விடாமல் பரிசு பொருட்களுடன் பள்ளியின் கலையரங்கில் நின்றனர்.
பள்ளி குழந்தைகளை கீழே நிற்க வைத்து விட்டு தமிழக முதல்வர் விஜய் பற்றி புதிய வகுப்பு எடுக்க துவங்கினர். அவர்கள் ஏற்கனவே கையில் எடுத்துச் சென்ற தமிழக முதல்வர் விஜய்யின் போட்டோவை காட்டி இது யார் தெரிகிறதா? இவர்தான் தமிழக முதல்வர் விஜய். எங்களை எல்லாம் இந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி புதிதாக விடுமுறை முடிந்து வந்துள்ள உங்களை சந்தித்து இந்த பேனா, பென்சில், பரிசு பொருட்களை எல்லாம் கொடுக்கச் சொல்லி உள்ளார்.
அதை கொடுப்பதற்கு தான் நாங்கள் வந்துள்ளோம், நீங்கள் இந்த பேனா, பென்சில், நோட்டுப் புத்தகத்தில் ஒவ்வொரு நாளும் எழுதும் பொழுது, முதல்வர் விஜய் ஒவ்வொரு முறையும் நினைவுக்கு வர வேண்டும். அவரை மனதிலேயே நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் நன்றாக படிப்பீர்கள் என்று அரசியல் பேச துவங்கினர்.
இதை பார்த்த ஆசிரியர்கள் செய்வதறியாமல் விழிபிதுங்கி நின்றனர். மாணவர்களிடம் படிப்பை போதிக்காமல் அவர் நடிகர் என்பதையும் அவர் முதல்வர் என்பதையும் அவரை நீங்கள் ஒவ்வொரு நாளும் மனதில் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் படிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் அரசியல் செய்து தவெகவினர் அல்ட்ரா சிட்டி செய்தனர். அந்த பகுதி நிர்வாகி செந்தில்குமார் தலைமையிலான தவெகவினர் இதுபோன்று மாணவர்களிடம் அரசியல் செய்து அல்ட்ரா சிட்டி செய்ததால் பள்ளி மாணவர்களிடையும் பெற்றோர்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர் விஜய் பிரசாரத்தின் போது வெற்றி பெறுவதற்காக குழந்தைகளிடம் தங்களின் பெற்றோரிடம் சொல்லி ஓட்டு போட வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது அக்கட்சியினர் நேரடியாக அனைத்து பள்ளிகளுக்கும் சென்று இதுபோன்ற விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர், மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் அருகிலேயே இந்த பள்ளி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட கல்வி நிர்வாகம் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
