திருவள்ளூர், பூந்தமல்லியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர், மார்ச் 6: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா துவக்கி வைத்தார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவள்ளுர் நகராட்சி அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் நகராட்சி சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். மேலும், நாட்டுப்புற நாடக கலைஞர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகள் திருவள்ளுர் நகரத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் முன்னிலையில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கிராமிய பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, திருவள்ளுர் அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரியில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா துவக்கி வைத்து பலூனை பறக்கவிட்டார். முன்னதாக, மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் தனியார் பள்ளிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி மையம், 24 வாக்குச்சாவடிகள் கொண்ட வாக்குச்சாவடி மையம், அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனியார் பள்ளிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி மையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கும்  ஸ்ட்ராங்க் ரூம் ஆகியவற்றை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உரிய அறிவுறைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், வட்டாட்சியர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சி ஆணையர் வசந்தி ஆலோசனையின்படி நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் பேருந்து நிலையத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக வாக்களிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விளக்கினார்.மேலும், வாக்காளர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி அலுவலர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

இதேபோல், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் பூந்தமல்லி நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை பூந்தமல்லி தொகுதி தேர்தல் அலுவலர் பிரீத்தி பார்கவி  கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் நகராட்சி ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பூந்தமல்லி நீதிமன்றம், பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக கொரோனா விழிப்புணர்வு வாகனமும் சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>