பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சின் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் முன்னணி வீரராக செக் குடியரசின் ஜாகுப் மென்சிக், பிரேசிலின் ஜோவ் பொன்சேகா உடன் மொதினார். இதில் சிறப்பாக ஆடிய மென்சிக் 6-4,6-3,7-6 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஸ்வரேவ் உடன் மென்சிக் மோத உள்ளார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் ரஷ்ய வீராங்கனை அன்னா கலின்ஸ்காயா, போலாந்து வீராங்கனை மாஜா ச்வாலின்ஸ்கா உடன் மோதினார். இதில், 7-6, 6-3 என்ற செட் கணக்கில் மாஜா ச்வாலின்ஸ்கா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸ் நாட்டையை சேர்ந்த அர்னா சபலென்கா, தரவரிசையில் 25ம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் சபலென்கா கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 7-5 என்ற கணக்கில் டயானா கைப்பற்றினார். இதனால் 3வது செட் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டயானா 6-0 என்ற கணக்கில் கைப்பற்றி சபெலன்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் டயானா அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் நம்பர் 1 ஜோடியான ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ்-அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபல்லோஸ், ஹ்யூகோ நைஸ்- ரோஜர் வாசெலின் ஜோடியுடன் மோதியது. இதில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிரானோலர்ஸ்-செபல்லோஸ் ஜோடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் நம்பர் 2 ஜோடியான இங்கிலாந்தின் ஹென்றி பாட்டன்- பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, இந்தியாவின் ராம் பாலாஜி-பிரேசிலுன் மார்செலோ டெமோலினர் உடன் மோதியது. இதில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் நம்பர் 2 ஜோடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி விலகல்
ஜகார்த்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் வெங் ஹாங் யாங் உடன் மோதினார். முதல் செட்டை சீன வீரர் 21-8 என்று கைப்பற்றிய நிலையில், 2வது மற்றும் 3வது செட்டை முறையே 22-20, 21-15 என்ற கணக்கில் வென்று ஆயுஷ் ஷெட்டி 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரணாய், அயர்லாந்த்தின் நியாட் நுயென் உடன் மோதினார். இதில் 17-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் பிரணாய் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர்-ருத்விகா கட்டே ஜோடி, தைவானின் ஹூ லிங்பேங்-யாக் போ ஹான் ஜோடி உடன் மோதியது. இதில் அதிரடியாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆரோன் டாய்-காங் காய் ஜிங் ஜோடி உடன் மோதியது. முதல் செட்டில் 11-6 என மலேசியா ஜோடி முன்னிலை வகித்த நிலையில் சாத்விக்-சிராக் ஜோடி காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியது. இதனால் மலேசிய ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
