6 கோப்பைகள் வென்று விராட் கோஹ்லி சாதனை

 

மும்பை: சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லாத விராட் கோஹ்லி, இதுவரை 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதில் 4 ஐசிசி கோப்பைகளும், 2 ஐபிஎல் கோப்பைகளும் அடங்கும். ரோஹித் சர்மாவுக்குப் பிறகு 4 ஐசிசி கோப்பைகளை வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோஹ்லியையே சேரும். கடந்த 2011 நடந்த ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று தனது முதல் உலகக்கோப்பையை வென்றார்.

தொடர்ந்து 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் கோஹ்லி இடம் பிடித்திருந்தார். இதேபோல் 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் அங்கம் வகித்த கோலி, கடந்த ஆண்டு மீண்டும் ரோஹித் சர்மா தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பை வென்றபோது அணியில் இடம்பெற்றிருந்தார். இந்தநிலையில் தொடர்ந்து தோல்வி முகமாக இருந்த ஆர்சிபி அணி 18 ஆண்டுகாலக் காத்திருப்புக்குப் பிறகு, கடந்த ஆண்டு ரஜத் படிதார் தலைமையில் முதன்முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.

இதேபோல் நடப்பு ஐபிஎல் கோப்பையை குஜராத் அணியை வீழ்த்தி, ஆர்சிபி 2வது முறையாக கைப்பற்றிய நிலையில், அணியில் இடம்பெற்றதோடு ஆர்சிபி மகுடம் சூட முக்கிய பங்காற்றினார் கோஹ்லி. ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கோஹ்லி தீவிரமாக விளையாடி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரில் விளையாடி மற்றொரு ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே கோஹ்லியின் தற்போதைய லட்சியமாக உள்ளது.

Related Stories: