சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி, பண முறைகேடு எதிரொலியாக காங்கிரஸ், பாஜ மாநில தலைவர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜவிலிருந்து அண்ணா மலை நேற்று விலகினார். பாஜ ஆதரவுடன் விரை வில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜ தலைவராக பதவி வகித்து வந்த அண்ணாமலை அதிமுகவுடனான பாஜவின் கூட்டணி முடிவுக்கு எதிராக தீவிரமாக இருந்தார்.
ஆனால், தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். இதையடுத்து கட்சி சார்பாகவும் எதிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார். குறிப்பாக அண்ணாமலைக்கு இணை அமைச்சர் அல்லது மாநிலங்களவை எம்பி ஆகிய பதவி வழங்கப்படும். இல்லாத பட்சத்தில் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்று அப்போது பேசப்பட்டது. ஆனால் பாஜ தலைமை சொன்ன மாதிரி அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. அனைத்தையும் நிராகரித்து விட்டது.
இதனால் அண்ணாமலை என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வந்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தான் போட்டியிட விரும்பிய தொகுதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். கோவை வடக்கு அல்லது திருப்பூர் வடக்கு ஆகிய தொகுதிகளில் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 2 தொகுதிகளும் வழங்கப்படவில்லை. இதனால், கடும் அதிருப்தியில் அண்ணாமலை இருந்து வந்தார். இதனால் அவர் சட்டசபை தேர்தலிலும் முழு வீச்சில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
கட்சியின் எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். கட்சியில் அவரது ஆதரவாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதேபோன்று ஒன்றிய அரசை எதிர்த்து முதல் குரலை கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதனால் பாஜ தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதாவது சமீபத்தில் சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘மும்மொழி கொள்கை’ திட்டத்துக்கு தனது எதிர்ப்பை அண்ணாமலை வெளிப்படையாக பதிவு செய்திருந்தார்.
மேலும் அவர் எங்கு சென்றாலும் உடன் வரும் உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்பு வீரர்களுடன் கூடிய வாகனம் அவருடன் வரவில்லை. அதேபோல், அண்ணாமலையின் காரில் பாஜ கொடியும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற அண்ணாமலை நேற்று காலையில் பாஜ தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி வாங்கினார். கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்லும் ஒருவருக்கு எப்படி சந்திக்க அனுமதி வாங்கலாம் என்றும் தலைவர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையை சந்திக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் வேண்டா வெறுப்பாக அண்ணாமலை சந்திக்க அனுமதி வழங்கினார். தொடர்ந்து அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்தார். அப்போது ஒரு அறிக்கையை அவரிடம் அண்ணாமலை வழங்கினார். அதில் தமிழக பாஜவில் நடக்கும் உட்கட்சி விவகாரங்கள், உட்கட்சி மோதலில் ஈடுபடுவது யார், யார்?, தான் ஒதுக்கப்பட்டதன் பின்னணி, பாஜவின் தோல்விக்கான காரணங்கள் என பல முக்கிய விஷயங்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தன்னுடைய ஆதங்கத்தையும் அமித்ஷாவிடம் கொட்டி தீர்த்துள்ளார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் வகையில் ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை பதவி வழங்கப்படும். கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலை பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு பாஜவிலிருந்து விலகுவதாக அண்ணாமலை ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனை டெல்லி வருமாறு அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து அவசரம் அவசரமாக அவர் டெல்லி செல்ல உள்ளார். ஏற்கனவே, சட்டமன்ற தேர்தல் செலவுக்காக டெல்லியில் இருந்து பணம் வழங்கப்பட்டது. அதை எதையும் நயினார் நாகேந்திரன் செலவழிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பணத்தை சிலர் மட்டுமே சுருட்டி கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாஜ வேட்பாளர்களிடம் இருந்து பெருமளவில் பணத்தை வாங்கிக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இதனால், நயினார் நாகேந்திரன் தமிழக பாஜ தலைவர் பதவியில் இருந்து 100 சதவீதம் மாற்றப்படுவது உறுதியாகி விட்டது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் அவருக்கு மாற்றாக புதிய தலைவராக யாரை நியமிப்பது என்றும் ஆலோசனை நடத்தவும் அமித்ஷா திட்டமிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி சென்றது கட்சிக்குள் ஒரு பேசும் பொருளாகியுள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்கள் மற்றும் கர்நாடகாவில் சுமுகமாக நடந்த ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை செய்ய தீவிரம் காட்டி வருகிறது. வரும் 2029ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இளம் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மாநில பிரிவுகளிலும் புதிய முகங்களை கொண்டு வர தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை இருந்து வருகிறார். அவரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை மாற்ற டெல்லி மேலிடம் முடிவு எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வின் போது பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
உண்மையான காங்கிரசாருக்கு இடம் வழங்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் வழங்கியவர்களுக்கு மட்டுமே சீட் ஒதுக்கப்பட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதித் தேர்வு மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அண்மையில் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தமிழகத்தில் மாநில தலைவரை மாற்றும் பட்சத்தில் பெரிய அளவில் கட்சிக்குள் மோதல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. கட்சியில் அவருக்கு ஆதரவாக உள்ள சில மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து தனிக்கட்சி தொடங்கும் திட்டத்தை கையில் எடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தமிழகத்தில் உடையும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
* விஜய்யிடம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அண்ணாமலை
தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் அவருடன் நெருக்கமாக இருந்து வருகிறார். அதனால், தான் பாஜ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். விஜய்யிடம் கூட்டணி பேசலாம் என்றும் அவர் முன்னர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், தான் தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் குறித்து அண்ணாமலை எதுவும் பேசவில்லை. ஆட்சி அமைத்த பிறகும் அண்ணாமலை விஜய்யுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது பாஜ டெல்லி மேலிட தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
