சேலம்: தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் மதுசூதனவல்லாறு (54). தொழிலதிபரான இவர், தொழிலை விரிவுபடுத்துவதற்காக, பெருந்தொகை கடன்பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த ஹரிநாடார் மூலமாக பணம் கிடைக்கும் என தெரியவந்தது. இதையடுத்து அவரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் நடந்தது. ரூ.150 கோடி கடன் வாங்கி கொடுக்க பல்வேறு செலவுகளுக்கு ரூ.2.25 கோடி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தொழிலதிபரான மதுசூதனவல்லாறு, ஹரிநாடாரின் வங்கி கணக்கிற்கு ரூ.2.25 கோடியை அனுப்பி வைத்தார். இதற்கிடையில் ஹரிநாடார் மோசடி செய்வதாக மதுசூதனவல்லாறுக்கு தகவல் கிடைத்தது. எனவே பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்ெபக்டர் மோகனா வழக்கு பதிந்து அவரது வங்கி கணக்கை முடக்கினார். இதனால் ரூ.2.25 கோடியை அவரால் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் மோசடி வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள ஹரிநாடாரை, இந்த மோசடி வழக்கில் கைது செய்ய நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் சேலம் கோர்ட்டிற்கு அழைத்துவந்தனர். அவரை 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிநாடார், பனங்காட்டுப்படை கட்சியில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதையடுத்து, சத்திரிய சான்றோர் படை என்ற கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
