இருதரப்புக்கு இடையே முன்விரோதம் காரணமாக கொலை செய்ய பதுங்கி இருந்த 7 பேர் கொண்ட ரவுடி கும்பல் கைது

* 4 பேர் தலைமறைவு * வெடிகுண்டு, கத்தி பறிமுதல்

புதுச்சேரி : புதுச்சேரி இசிஆர் சாலையில் கடந்த 29ம் தேதி மர்ம நபர்கள் சாலையோரம் நின்று இருந்த பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டை வீசிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

பிறகு பல்வேறு இடங்களில் இருந்த 510 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து நாட்டு வெடிகுண்டை பொக்லைன் மீது வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

பிறகு மேற்கொண்டு விசாரணை நடத்தி முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்த ஏழுமலை மகன் எழில் (29) என்பவரை பிடித்து விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த தகடு சத்யா என்பவருக்கும் ஆனந்த் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் ஆனந்தை கொலை செய்ய தகடு சத்யா நாட்டு வெடிகுண்டு தயார் செய்து தனது கூட்டாளிகளுடன் ஆனந்தை கொலை செய்ய கடந்த 28ம் தேதி திட்டம் தீட்டியுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த பெரியகடை ேபாலீசார் தகடு சத்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அப்போது செய்யப்பட்ட நாட்டு வெடிகுண்டை சத்யா கூட்டாளியான எழில் உருளையன்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த சீனு (எ) சிவசந்திரன் (34) என்பரிடம் கொடுத்துள்ளார். அவர் ஆட்டோவில் வரும்போது பொக்லைன் மீது வீசிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தை கொலை செய்ய திட்டம்போட்டு லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே கத்தியுடன் 10 பேர் கொண்ட ரவுடி கும்பல் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றபோது 4 பேர் தப்பிச்சென்ற நிலையில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்களை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர்கள், சீனு (எ) சிவசந்திரன் (34), சிங்கிரிகோயில் குமரன் (48), பிள்ளைத்தோட்டம் கஜபதி (எ) வினோத் (35), சாரம் பாலா (எ) சிவபாலன் (23), முத்தியால்பேட் வெங்கடேசன் (எ) நரி (29), குமரகுருபள்ளம் பிறைசூடன் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், குமரகுருபள்ளம் வினோத், சின்ன நரிமேடு மணிகண்டன், ஏம்பலம் சசி, பிள்ளைத்தோட்டம் கார்த்தி ஆகிய 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து எழில் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பிள்ளைத்தோட்டம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள், 5 செல்போன்கள், 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சத்யா ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கடந்த வாரம் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் பதிலுக்கு கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் மீண்டும் அதே லாஸ்பேட்டை பகுதியில் கொலை செய்ய பதுங்கி இருந்த ரவுடி கும்பலை போலீசார் வெடிகுண்டுடன் கைது செய்துள்ள சம்பவம் லாஸ்ேபட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது.

Related Stories: