கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: 5 பேர் கும்பல் கைது; புதுவண்ணையில் பரபரப்பு

 

 

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை இந்திரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (31). இவரது நண்பர் ஆனந்த் (43). இவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். இந்திராநகர் பகுதியில் 13 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளதால் இவர்கள் தீவிரமாக தவெகவிற்கு பிரசாரம் செய்து 500க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று கொடுத்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கும், அந்த பகுதியில் கஞ்சா, போதை பொருள் விற்பனை செய்யும் அதிமுகவை சேர்ந்த அகிலா என்பவரின் மகன்கள் நரேன் (27), நவீன் (25) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்களும் தற்போது தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் கட்சியிலும் மோதல் இருந்து வந்துள்ளது. மேலும் போதை பொருள் விற்பனை குறித்து காவல்துறையில் தகவல் தெரிவிப்பதாகவும் மணிகண்டன் மீது அந்த கும்பல் கோபத்தில் இருந்துவந்துள்ளது. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மணிகண்டனுக்கு ஆதரவாக புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டனின் மைத்துனரான ஆட்டோ டிரைவர் விஷ்ணு (26) என்பவர், கடந்த வாரம் நவீன் கும்பலுடன் தகராறு செய்துள்ளார். இவர், தவெக அமைச்சரான மரியவில்சனின் ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது.

கோஷ்டி தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டிபன் வாங்கி கொண்டு வீட்டின் அருகே வந்தபோது, அமைச்சரின் ஆதரவாளர் விஷ்ணுவை இந்திராநகர் பகுதியை சேர்ந்த நரேன் (27), நவீன் (26) மற்றும் கூட்டாளிகள் சுகுமார் (26), கொருக்குப்பேட்டையை சேர்ந்த காளிஷா (27), வியாசர்பாடியை சேர்ந்த குள்ள பிரசாத் (27) ஆகியோர் வழிமடக்கி கத்தி மற்றும் சுத்தியலால் தலையில் வெட்டியும் அடித்தும் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த விஷ்ணு குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரேன், நவீன், சுகுமார், காளிஷா, குள்ளபிரசாத், ஆகியோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இதில், இவர்கள் மீது போதை பொருள் கடத்தல், அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. பின்னர், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் அவரது உறவினர்கள் புதுவண்ணாரப்பேட்டை வள்ளலார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சமரசம் பேசினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. இந்திராநகர் பகுதியில் கஞ்சா, போதை பொருள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இதனை காவல்துறை தடுக்க தவறியதால் சம்பவம் நடந்துள்ளது” என்றனர். விஷ்ணு சிகிச்சை பலனின்றி இறந்ததால் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: