அமெரிக்காவில் பயங்கரம்; குடும்பத் தகராறில் 7 பேர் சுட்டுக் கொலை: துப்பாக்கியால் சுட்டு கொலையாளி தற்கொலை

 

மஸ்கடின்: அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்தில் நடந்த தொடர் துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. அமெரிக்காவின் ஐயோவா மாகாணத்திலுள்ள மஸ்கடின் நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார், ஒரு வீட்டிற்குள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், அந்த வீட்டில் வசித்தவர்களுக்கும் அவர்களது உறவினரான ரியான் வில்லிஸ் மெக்ஃபார்லண்ட் (52) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறே இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம் எனத் தெரியவந்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே அங்கிருந்து மெக்ஃபார்லண்ட் தப்பியோடியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் பதுங்கியிருந்த கொலையாளி மெக்ஃபார்லண்டை மிசிசிப்பி நதிக்கரை ஓரம் போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில், மற்றொரு வீட்டிலும் மற்றும் அருகிலுள்ள ஒரு வணிக நிறுவனத்திலும் மேலும் 2 ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தொடர் தாக்குதலில் கொலையாளி உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் மெக்ஃபார்லண்டின் குடும்ப உறுப்பினர்கள் என்று போலீஸ் அதிகாரி அந்தோணி கீஸ் தெரிவித்தார்.

Related Stories: