லண்டன்: நடிகை சுஷ்மிதா சென் குறித்து சமூகவலைதளங்களில் எழுந்த அவதூறுகளுக்கு தொழிலதிபர் லலித் மோடி உருக்கமான விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் (49) மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவர் லலித் மோடி (61) ஆகியோருக்கு இடையிலான காதல் விவகாரம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பணமோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பியோடி லண்டனில் வசித்து வரும் லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, புதிய வாழ்க்கை தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
அந்த சமயத்தில், பணத்திற்காகவே லலித் மோடியை சுஷ்மிதா சென் காதலிப்பதாக கூறி, அவரை ‘பணத்தாசை பிடித்தவர்’ என சமூகவலைதளங்களில் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த லலித் மோடி, சுஷ்மிதா சென் மீதான விமர்சனங்களை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சுஷ்மிதா சென் மிகவும் அழகான, வெற்றிகரமான மற்றும் சுயசார்பு கொண்ட பெண். எனக்கு தெரிந்தவர்களிலேயே அவரிடம் தான் அதிக வைரங்கள் உள்ளன.
அவர் யாரிடமும் எதற்காகவும் பணம் ரீதியாக எதிர்பார்த்து இருந்ததில்லை. நாங்கள் வெளியே சென்ற போது ஒருமுறை கூட நான் பணம் செலுத்தியதில்லை, அவரே அனைத்து செலவுகளையும் செய்வார். உண்மையில் நான் அவருடைய செலவில் வாழும் ஒரு ஆண் நண்பர் போலத்தான் இருந்தேன்’ என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2022ம் ஆண்டில் அந்த புகைப்படத்தை பதிவிட்டது திட்டமிடப்படாத ஒன்று என்றும், ஒரு விவாதத்தின் போது விளையாட்டுத்தனமாக அதை பதிவிட்டதாகவும் கூறினார்.
சுஷ்மிதா சென் சிறந்த தோழி என்று குறிப்பிட்ட அவர், ‘யாரிடமிருந்தும் எதையும் எதிர்பாராத ஒரு பெண்ணை பார்த்து பணத்தாசை பிடித்தவர் என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஒரு தனித்தாயாக தனது மகள்கள் ரெனீ மற்றும் அலிசாவை அவர் தத்தெடுத்து வளர்க்கும் விதம் போற்றுதலுக்குரியது’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே சுஷ்மிதா சென்னும் தனக்கு வைரங்கள் பிடிக்கும் என்றும், அதை தனது சொந்த பணத்திலேயே வாங்கி கொள்வதாகவும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
