துபாய்: ஈரானில் உள்ள ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயன்று வரும் நிலையில் இரு நாடுகளும் ஒன்றன்மீது ஒன்று தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கடல் பகுதியில் இயங்கிக்கொண்டு இருந்த அமெரிக்காவின் எம்க்யூ-1 டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ரேடார் மற்றும் டிரோன் கட்டுப்பாட்டு தளங்கள் மீது குண்டுவீசி தாக்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை இடைமறிப்பதற்காக அதிகாலையில் தனது வான்பாதுகாப்பு படைகள் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது. எங்கு தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
லிட்டானி நதிக்கு அப்பால் லெபனான் மீதான தனது ஆக்கிரமிப்பை இஸ்ரேல் விரிவுபடுத்துவதாலும் ஹிஸ்புல்லா தீவிரவாதக் குழு இஸ்ரேலுக்குள் டிரோன்களை தொடர்ந்து ஏவி வருவதாலும் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
அமைதிப்பேச்சுவார்த்தை நிறுத்தம்
லெபனானில் இஸ்ரேலிய நடவடிக்கை நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக ஈரான் அறிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவுடன் நடந்து வந்த பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதை ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
