வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மின்னணு வீடியோ பிரசார வாகனம் துவக்கம்

கரூர், மார்ச் 5: கரூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் பிரசார மின்னணு வீடியோ வாகனத்தை கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார்.சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விளக்கும் வகையில் பல்வேறு வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதி நவீன எல்இடி (மின்னணு வீடியோ வாகனம்) வீடியோ வாகனத்தை கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி பார்வையிட்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சட்டமன்ற தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் விடுபடாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், தேர்தலில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கும் வகையிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் (விவிபேட்) குறித்தும், வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதி குறித்தும், தேர்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள குறும்படங்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன எல்இடி வாகனம் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரையிடப்படவுள்ளன.

ஆயத்த ஆடை உற்பத்தி உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், கல்லூரிகள், வாரச்சந்தைகள் என அதிகளவில் வாக்காளர்கள் கூடும் இடங்களில் இந்த விழிப்புணர்வு குறும்படங்கள் தொடர்ந்து திரையிடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத்அலி, நேர்முக உதவியாளர் (பொது) அருள், தேர்தல் தாசில்தார் பிரபு உள்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Related Stories:

>