×

நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் கியூட் தேர்வில் தொழில்நுட்ப கோளாறு: தாமதத்தால் மாணவர்கள் கடும் அவதி; 3,700 பேர் தேர்வு எழுதாமல் சென்றனர்

புதுடெல்லி: நீட் நுழைவுத்தேர்வைத் தொடர்ந்து, கியூட் நுழைவுத்தேர்விலும் மாணவர்களின் பொறுமையை தேசிய தேர்வு முகமை சோதித்துள்ளது. நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு தொடங்கியதில் பல மணி நேர தாமதம் ஏற்பட்டதால் ஏராளமான மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாயினர். 3,700 பேர் தேர்வு எழுதாமலேயே சென்று விட்டனர்.

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்வி நிலையங்களில் இளங்கலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத்தேர்வு (கியூட்-யூஜி) கடந்த 2022ல் அறிமுகம் செய்யப்பட்டது. மாநில அரசின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் கியூட் நுழைவுத்தேர்வை பின்பற்றலாம். இதனால், நாட்டின் 2வது மிகப்பெரிய நுழைவுத்தேர்வாக கியூட் உள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான கியூட்-யூஜி தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கி வரும் 31ம் தேதி வரை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பக்ரீத் பண்டிகை காரணமாக சில தேர்வுகள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு, மே 30 மற்றும் ஜூன் 6, 7ம் தேதிகளில் நடத்துவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில், கியூட் யூஜி நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் பல தேர்வு மையங்களில் நடந்தது. காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பல தேர்வு மையங்களில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

மாணவர்கள் தேர்வு மையங்களில் தயாராக அமர்ந்திருந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு தொடங்காததால் மாணவர்கள் குழப்பமடைந்தனர். 2 மணி நேரமாகியும் தேர்வு தொடங்காத நிலையில் சில தேர்வு மையங்களில் இருந்து மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். மேலும் சில இடங்களில் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்காமல் மாணவர்கள் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.

இதனால் கடும் வெயிலில் நின்றபடி மாணவர்கள், பெற்றோர்கள் செய்வதறியாமல் முழித்தனர். தேர்வு தொடங்குவதில் தாமதம் குறித்து தேர்வை மையம் தரப்பிலோ, தேசிய தேர்வு முகமை தரப்பிலோ எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். பின்னர் 3 மணி நேரத்திற்கும் மேல் தாமதத்திற்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு மத்தியில் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சிலர் தேர்வு தொடங்கும் முன்பாகவே கிளம்பிச் சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து, பிற்பகலில் நடக்க இருந்த தேர்வு நேரத்தில் மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டது. அதன் எக்ஸ் பதிவில், ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சில மையங்களில் கியூட் நுழைவுத்தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இக்கோளாறு சரிசெய்யப்பட்டு விட்டது. எந்தவொரு மாணவரும் பாதிக்காத வகையில், முழுமையான கூடுதல் கால அவகாசத்துடன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தாமதம் காரணமாக, மதிய நேர தேர்வு அட்டவணை திருத்தப்பட்டுள்ளது.

அதன்படி தேர்வு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு தொடங்கும். மாணவர்கள், பெற்றோருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறது. காலை நேர தேர்வில், தாமதத்திற்குப் பிறகு தேர்வு தொடங்கும் முன்பாகவே கிளம்பிச் சென்ற 3,765 மாணவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

தேர்வுக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை மேற்கொண்ட டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கே.கீர்த்திவாசன், ‘‘சிறிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கியூட் யூஜி தேர்வின் காலை நேர அமர்வு தொடங்குவதில் சுமார் 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இக்கோளாறு எங்கள் தொழில்நுட்பக் குழுக்களால் உடனடியாகக் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டது. தேர்வின் நம்பகத்தன்மைக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், தேர்வு தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்’’ என்று கூறப்பட்டது. சமீபத்தில் வினாத்தாள் கசிந்ததாக நாடு முழுவதும் நடந்த நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. தற்போது கியூட் தேர்விலும் குளறுபடி ஏற்பட்டிருப்பது தேசிய தேர்வு முகமையின் திறனை கடும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.

* ஒன்றிய கல்வி அமைச்சர் பதில் சொல்வாரா?
நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘தேசிய நுழைவுத்தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளை இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. விரைவில் நீட் நுழைவுத்தேர்வு கணினி வழி தேர்வாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். கியூட் தேர்வுகள் ஏற்கனவே கணினி வழியாகத்தான் நடக்கின்றன.

வரும் காலத்தில் நீட் தேர்வுகளும் கணினி வழியாக நடத்தப்பட்டால் இதுபோன்ற குளறுபடிகள் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? ஏற்கனவே சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் ஓஎஸ்எம் எனும் கணினி வழி மதிப்பீட்டு முறையிலும் பல குளறுபடிகள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் சொல்வாரா என மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

* விஸ்வகுருவால் ஒரு தேர்வை கூட நடத்த முடியவில்லை
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது எக்ஸ் தளத்தில், ‘‘நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்இ மற்றும் கியூட் என நான்கு தேர்வுகள். ஒரு கோடி மாணவர்கள். இவற்றில் ஒரு தேர்வைக் கூட நேர்மையாக நடத்த முடியவில்லை. தன்னை விஸ்வகுரு என பெருமை பேசிக் கொள்கிறார்கள். ஆனால், சொந்த நாட்டிலேயே ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த முடியவில்லை. மோடி அவர்கள் ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும் முழுமையாக சீர்குலைத்து விட்டார். எந்த தலைமுறையின் எதிர்காலத்தை நீங்கள் சீரழித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதே தலைமுறைதான் ஒருநாள் உங்களிடம் அதற்கான பதிலை கேட்கும்’’ என கூறி உள்ளார்.

* குண்டர்களை வைத்து மிரட்டி வெளியேற்றினர்: மாணவர்கள் கதறல்
நொய்டா செக்டார் 64ல் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதிய அனுஷ்கா என்ற மாணவி அளித்த பேட்டியில், ‘‘காலை 7 மணி முதல் 8.30க்குள் தேர்வு மையத்திற்கு வர வேண்டுமென கூறப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து மாணவர்களும் தேர்வறைக்குள் வந்து விட்டனர். காலை 9 மணிக்கு தேர்வு தொடங்க வேண்டிய நிலையில், தாமதம் ஏற்பட்டது. ஆனால் யாரும் எந்த விளக்கமும் தரவில்லை. ஒன்றரை மணி நேரம் வரை மாணவர்கள் பொறுமையாக அமர்ந்திருந்தனர்.

அதன்பின் பலரும் கேள்வி கேட்ட போது தேர்வறையில் இருந்த யாரும் பதிலளிக்கவில்லை. சிலர் அங்கிருந்து வெளியேறினர். காலை 11.30 மணிக்கு சிலர் தேர்வறைக்குள் வந்து மாணவர்களை வெளியேற கட்டாயப்படுத்தினர். அப்போதும் தேர்வு தொடங்காததற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. சிலர் வெளியேற மறுத்ததால் குண்டர்களை வரவழைத்து அடித்து விரட்டுவதாக மிரட்டி வெளியேற வைத்தனர்’’ என்றார்.

Tags : New Delhi ,NEET ,National Testing Agency ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...