புதுடெல்லி: இயல்பை விட குறைவான பருவமழை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகம் தனது மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ‘‘ உள்நாட்டு அடிப்படைகள் பெருமளவில் சீராக உள்ளன. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் பிஎம்ஐ குறியீடுகள் விரிவாக்க நிலையில் உள்ளன. தொழிலாளர் சந்தை நிலையாக உள்ளது.
மேலும் அந்நிய செலாவணிக் கையிருப்பு வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகிறது. இயல்பைவிட குறைவான பருவமழை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் வரும் மாதங்களில் ஒட்டுமொத்த நுகர்வுத் தேவை பின்னடைவுகளை சந்திக்கக்கூடும். இந்திய பொருளாதரத்தின் குறுகியக் கால கண்ணோட்டம் எச்சரிக்கையான மீள்திறன் கொண்டதாகவே உள்ளது.
மேற்காசிய மோதல் தொடங்கியதில் இருந்து உலகளாவிய சூழல் கணிசமாக மிகவும் சவாலானதாக மாறியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இறுக்கமான நிதி நிலைமைகள் மற்றும் முக்கியப் பொருளாதாரங்களில் வளர்ச்சி வேகம் குறைதல் ஆகியவை இந்தியாவால் முழுமையாக தற்காத்துக்கொள்ள முடியாத பின்னடைவுகளை ஏற்படுத்துகின்றன. 2026 ஏப்ரலில் இந்தியப் பொருளாதாரம் தனது வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக்கொண்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
