×

பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு மியான்மர் அதிபர் இந்தியா வருகை

புதுடெல்லி: இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங் நேற்று இந்தியா வந்தார். மியான்மர் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த பொது தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற யுஎஸ்டிபி கட்சி வெற்றி பெற்றதால், மீண்டும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ராணுவ ஆட்சி குழுவின் தலைவர் யு மின் ஆங் ஹ்லைங் மியான்மர் அதிபராக பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய வௌியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.

இந்நிலையில் வரும் 1ம் தேதி நடைபெற இருந்த சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள யு மின் ஆங் ஹ்லைங் இந்தியா வர இருந்த நிலையில் அந்த மாநாடு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தற்போது பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நேற்று யு மின் ஆங் ஹ்லைங் 5 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். அவருடன் கேபினட் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழிலதிபர்கள் அடங்கிய குழுவினரும் இந்தியா வந்துள்ளனர்.

பீகார் மாநிலம் புத்தகயா விமான நிலையம் வந்திறங்கிய அவரை பீகார் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் வரவேற்றார். தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மகாபோதி ஆலயம் சென்ற யு மின் ஆங் ஹ்லைங், புத்தர் ஞானம் பெற்ற இடத்தில் பிரார்த்தனை செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை டெல்லி சென்ற யு மின் ஆங் ஹ்லைங்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் யு மின் ஆங் ஹ்லைங், இரு நாடுகளுக்குமிடையேயான நாகரீக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் கலந்துரையாட உள்ளார். அன்று நடைபெறும் வணிக அரங்கத்திலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். நாளை மறுதினம்(ஜூன் 2) மும்பை செல்லும் மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங், வர்த்தக மற்றும் தொழில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

யு மின் ஆங் ஹ்லைங் இந்திய வருகை குறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தன் எக்ஸ் பதிவில், “புத்தகயாவுக்கு வந்துள்ள மியான்மர் அதிபர் யு மின் ஆங் ஹ்லைங்குக்கு அன்பான வரவேற்பு. அவரது வருகை நமது இரு நாடுகளையும் பிணைக்கும் வலுவான ஆன்மீக, வரலாற்று மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளையும். தற்போதைய ஒத்துழைப்பின் ஆழத்தையும் பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Tags : Myanmar ,President ,PM Modi ,India ,New Delhi ,U Min Aung Hlaing ,USDP party ,
× RELATED ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை...