×

மேற்கு வங்கத்தில் பரபரப்பு மம்தாவின் மருமகன் மீது கல்,செருப்பு,முட்டை வீசி தாக்குதல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் நடந்த சட்ட பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று முதல்முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நீண்ட காலம் ஆட்சியில் இருந்த திரிணாமுல் கட்சி தோல்வியுற்றது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மம்தாவின் மருமகனும் கட்சியின் பொது செயலாளருமான அபிஷேக் பானர்ஜி நேற்று சோனார்பூருக்கு சென்றார்.

அப்போது திரிணாமுல் கட்சி தொண்டர் வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த பெண்கள் துடைப்பம், மூங்கில் குச்சிகள் ஆகியவற்றை கையில் வைத்திருந்தனர். அபிஷேக் பானர்ஜி அருகில் வந்ததும் திருடன், திருடன் என அவர்கள் கோஷமிட்டனர். இதற்கிடையே மர்ம நபர்கள் சிலர் திடீரென அபிஷேக் மீது கற்கள், முட்டைகள், செருப்புகளை வீசினர். அவரை தாக்கி, காலால் எட்டி உதைக்கவும் முயன்றனர். இந்த தாக்குதலில் அபிஷேக்கின் சட்டை கிழிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உள்ளூர் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் அங்கு வந்தனர். அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தின் போது தலைக்கவசம் அணிந்திருந்த அபிஷேக் பானர்ஜியை அங்கிருந்து சிலர் பாதுகாப்பாக அழைத்து வரும் காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியானது. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், என்னை கொல்ல சதி நடக்கிறது.

வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிக்காத வரையிலும் அந்த இடத்தில் இருந்து நகர மாட்டேன் என்றார். அபிஷேக் பானர்ஜி மீது நடந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அபிஷேக் பானர்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில் ஆட்சியாளர்கள் கொலையாளிகளாகி விட்டனர். பாஜவே உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : West Bengal ,Mamata ,Kolkata ,BJP ,West Bengal Legislative Assembly elections ,Trinamool Party ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...