திருவனந்தபுரம்: கடந்த 3 மாதங்களுக்கு முன் மலப்புரத்தில் தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்பட்ட பெருமளவு வெடிபொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று கேரளத்தில் 5 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு வந்த ஒரு வெங்காய லாரியில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் உள்பட பயங்கர வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மலப்புரம் அருகே உள்ள செம்மாடு என்ற இடத்தில் வைத்து இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கோழிக்கோடு முக்கம் பகுதியை சேர்ந்த முகம்மது ஹாரிஸ் என்பவர் உள்பட 6 பேரை கைது செய்தது. இவர்களிடம் விசாரணை நடத்திய போது கல் குவாரிக்காக வெடிபொருட்களை கொண்டு வந்ததாக கூறினர்.ஆனால் அது உண்மையல்ல என்று விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து என்ஐஏவும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது ஹாரிஸ் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் நிறுவனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
