×

திருவனந்தபுரத்தில் பலத்த மழை ரயில் பாதையில் மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பலத்த மழை காரணமாக ரயில் பாதையில் மண் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகர்கோவில்-கோட்டயம் பயணிகள் ரயில் வருவதற்கு சற்று முன் இந்த சம்பவம் நடந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் மதியத்திற்குப் பின்னர் மழை தீவிரமடைந்தது.

சுமார் 1 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. தம்பானூர், கிழக்கேகோட்டை, பழவங்காடி உள்பட பகுதிகளில் கடைகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் திருவனந்தபுரம் தெற்கு (நேமம்) மற்றும் திருவனந்தபுரம் மத்திய ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள குஞ்சாலும்மூடு மேம்பாலம் அருகே திடீரென தண்டவாளத்தில் மண் சரிந்தது.

அப்போது அந்த இடத்திற்கு அருகே நாகர்கோவில்- கோட்டயம் பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. சம்பவம் குறித்து அறிந்தவுடன் அந்த ரயில் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் தெற்கு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அப்புறப்படுத்தினர். சுமார் 1 மணிநேரத்திற்குப் பின் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

Tags : Thiruvananthapuram ,Nagercoil ,Kottayam ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...