திருவெறும்பூர் செல்வபுரத்தில் புதிதாக கட்டப்பட்டு 2 ஆண்டாக பூட்டி கிடந்த ரேஷன் கடை திறப்பு பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி

திருவெறும்பூர், மார்ச் 4: திருச்சி மாநகராட்சி 65வது வார்டுக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட மறுநாளில் இருந்து 2 ஆண்டுகளாக பூட்டி கிடந்த ரேஷன் கடை நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். திருச்சி மாநகராட்சி 65வது வார்டுக்குட்பட்ட பகுதி திருவெறும்பூர் செல்வபுரம். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அதிகமான எண்ணிக்கையில் குடும்ப அட்டைகள் இருந்ததால் அனைத்து மக்களுக்கும் குறித்த நேரத்தில் பொருட்கள் கிடைக்காமல் போனது. இதனால் பொதுமக்கள் இந்த கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எம்பி தொகுதி நிதியின் கீழ் காந்திநகர் பகுதியில் புதிதாக ஒரு ரேஷன் கடை கட்டப்பட்டது.இதனால் அப்பகுதி மக்கள் தங்களது பிரச்னை தீரும் என காத்திருந்தனர்.அப்படி கட்டப்பட்ட ரேஷன் கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பொங்கல் பண்டிகையின்போது திறந்து வைக்கப்பட்டது. மறுநாளில் இருந்து ரேஷன் கடை பூட்டப்பட்டது. இதற்கு சரியான காரணம் யாரும் கூறவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் அந்த பகுதியில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சேர்ந்து ரேஷன் கடையை திறக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நீண்டதொரு போராட்டத்திற்கு பிறகு காந்திநகரில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடந்த ரேஷன் கடை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் காட்டூர் பகுதி நிர்வாகி யுவராஜ், நிர்வாகிகள் நிவேதா, முருகா, அஜித் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Related Stories:

>