செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரம்; தவெகவினரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: வேலூர் அருகே பரபரப்பு

 

வேலூர், மே 26: வேலூர் கணியம்பாடி செங்கல் சூளைகளில் மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த தவெகவினரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் அடுத்த கணியம்பாடி, கணியம்பாடி புதூர், நெல்வாய், வல்லம் உள்ளிட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 22ம் தேதி கணியம்பாடி ஒன்றிய தவெக செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உட்பட பலர் கார், பைக்குகளில் கணியம்பாடி புதூரில் இயங்கி வரும் சண்முகம், தினகரன், சுனில்குமார், ரமேஷ், சுமன் ஆகியோரின் செங்கல்சூளைகளில் புகுந்து மாதம் ரூ.1 லட்சம் கொடுக்காவிட்டால் சூளைகளை இழுத்து மூடுவோம் என மாமூல் கேட்டு மிரட்டியதோடு ஆபாசமாக பேசி உள்ளனர்.

இதில் தகராறு ஏற்பட்டதால் தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று இருதரப்பையும் சமாதானப்படுத்தினர். இதற்கிடையில் தவெகவினர் மாமூல் கேட்டு மிரட்டிய வீடியோ வைரலானது. மேலும் செங்கல்சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தாலுகா போலீசாரிடம் புகார் மனு அளித்தனர். ஆனால் புகார் கொடுத்து 2 நாட்கள் ஆகியும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வேலூர்-திருவண்ணாமலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பிக்கள் இருதயராஜ், விஜிகுமார், தாசில்தார் பழனி மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ‘மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டத்தை கைவிடமாட்டோம்’ என தெரிவித்தனர். அதற்கு போலீசார், ‘மறியல் போராட்டம் காரணமாக பணிக்கு செல்வோர் மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலை மறியலை விலக்கிக்கொள்ளுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரையும் ஆர்ஐ அலுவலகத்திற்கு வரவழைத்து, ஆர்டிஓ செந்தில்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது செங்கல் சூளை உரிமையாளர்கள் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினர். ஆதாரம் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்க பொதுமக்கள் கோரிக்கை
செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்கள் கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளை தொழிலையே வாழ்வாதாரமாக நம்பி சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் திடீரென எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மாமூல் கேட்டு மிரட்டுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசு எங்களுக்கு தொழில் செய்ய எளிமைப்படுத்த வேண்டும். அதோடு மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரை அக்கட்சி பதிவிலிருந்து நீக்க வேண்டும்’ என்றனர்.

ஆடியோ ஆதாரம் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் -ஆர்டிஓ

இதுகுறித்து வேலூர் ஆர்டிஓ செந்தில்குமார் கூறியதாவது: செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டு மிரட்டியதாக தவெக நிர்வாகி விஜயகுமார் மீது பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து பேசினோம். அவர்களது புகாரின் மீது விசாரணை மேற்கொண்டோம். மேலும் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஆதாரம் உண்மையாக இருந்தால் விசாரித்து வழக்குப்பதிவு செய்யப்படும்.

மேலும் 300 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்க செங்கல் சூளைக்கு தேவையான மண் எடுக்க எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளோம். விண்ணப்பித்த பிறகு உயர் அதிகாரிகளுக்கு அதனை பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேறு ஏதேனும் புகார் இருந்தால் அதனை எங்களது பார்வைக்கு நேரடியாக கொண்டு வர அறிவுறுத்தி உள்ளோம். இதேபோல புகாருக்கு உள்ளான தவெக நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்துள்ளோம். அவர்களிடமும் புகார் தொடர்பாக எங்களை அணுக அறிவுறுத்தியுள்ளோம். இதுகுறித்து இரு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: