கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க புதிய கட்டுப்பாடுகள் விதித்த அமெரிக்கா- வெளிநாட்டினர் அதிர்ச்சி

வாஷிங்டன்: நிரந்தர அமெரிக்க குடியுரிமை கோரும் வெளிநாட்டினர், முதலில் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி சென்று அங்கிருந்து கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அமரிக்க அதிபர் டிரம்ப் அரசின் இந்த கொள்கை முடிவால் கிரீன் கார்டு விண்ணப்பிக்க காத்திருக்கும் வெளிநாட்டினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அமெரிக்காவில் நிரந்தரமாக வாழ்வதற்கும், சட்டப்பூர்வமாக வேலை செய்வதற்கும் கிரீன் கார்டு (Green Card) எனப்படும் நிரந்தரக் குடியுரிமை (Permanent Residency) அட்டை அவசியமாகும். அமெரிக்காவில் எவ்வித விசா கட்டுப்பாடுகளும் இன்றி வாழ்நாள் முழுவதும் வாழலாம். தவிர எந்தவொரு அமெரிக்க நிறுவனத்திலும், எந்தவொரு பணியிலும் தடையின்றி சேரலாம் அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்கலாம்.வேலை இழப்பு ஏற்பட்டாலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் மற்றும் விசா நெருக்கடி ஏற்படாது என்பதால் பல வெளிநாட்டவர்கள் அமெரிக்காவின் கிரீன் கார்டை பெற முனைகிறார்கள்.

இந்த நிலையில் தான் அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் தங்கியிருந்து கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையில் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறைகளின்படி அமெரிக்காவிற்குள் இருந்தவாறே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை மாற்றப்பட்டு, விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகே விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக கூறப்படும் இந்த நடவடிக்கை, விசா வைத்திருப்பவர்கள் மற்றும் விசிட்டர்கள் அமெரிக்காவில் இருக்கும்போதே கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க அனுமதித்திருந்த நடைமுறையை ரத்து செய்துள்ளது. அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்ட பிறகு தலைமறைவாகி அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கிவிடுபவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டிய தேவை இந்த புதிய நடைமுறையின் மூலம் குறையும் என்று அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

கிரீன் கார்டுக்கான அமெரிக்க அரசின் புதிய கொள்கை முடிவால் மாணவர், சுற்றுலா அல்லது பணி விசாக்களில் அமெரிக்காவில் ஏற்கனவே தங்கியிருந்து நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பலர், இனி அமெரிக்காவை விட்டு வெளியேறி தங்கள் சொந்த நாட்டுக்குச் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: