கோவை அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது!

கோவை: கோவை அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நண்பர் மோகன் ராஜும் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது பள்ளபாளையம். இங்குள்ள பாரதிபுரத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளி தம்பதி. இத்தம்பதிக்கு 10 வயது மகள் உண்டு. இவர்கள் குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் போத்தனூரில் இருந்து இங்கு குடியேறினர். தம்பதியின் மகள் போத்தனூர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

அங்கிருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்கி வந்த நிலையில் ஐந்தாம் வகுப்பிற்கு கண்ணம்பாளையம் பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். இந்நிலையில், மாணவி நேற்று முன்தினம் 21ம் தேதி இரவு 7 மணி அளவில் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிச்சென்றார்.

அதன்பின், அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடைக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஒரு வாலிபர், மாணவியை பைக்கில் ஏற்றிச்சென்றதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெற்றோர் சூலூர் போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது மாணவியை கடத்தியது அதே பகுதியில் வசிக்கும் தொழிலாளி கார்த்திக் (33) என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

தீவிர விசாரணையில் அவர் மாணவியை கடத்திச்சென்று பலாத்காரம் செய்து கொன்று விட்டதாகவும், உடலை வீட்டில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கண்ணம்பாளையம் குளத்தில் வீசி விட்டதாகவும் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மாணவியின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து கார்த்திக் கைது செய்யப்பட்டார். கைதான கார்த்தி தப்ப முயன்றபோது, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மாணவியை, கார்த்திக் தான் பலாத்காரம் செய்து கொன்று வீசினாரா? அல்லது கும்பலே இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் கார்த்திக்கு உதவியாக இருந்ததாக அவரது நண்பர் மோகன் ராஜ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மோகன்ராஜ்-க்கு மே 27 வரை காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள கார்த்திக்கை நேரில் சென்று நீதிபதி விசாரணை நடத்த உள்ளார்.

Related Stories: