டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் எரிபொருள் விலை உயர்த்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விலை உயர்வின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 87 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 91 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உயர்வால் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.105.31க்கும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.96.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் மற்றும் பதற்றமான சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கூடுதல் சுமையைக் குறைக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த மே 15 முதல் எரிபொருள் விலையை படிப்படியாக உயர்த்தத் தொடங்கியுள்ளன.
கடந்த மே 15-ஆம் தேதி லிட்டருக்கு அதிரடியாக ரூ. 3 உயர்த்தப்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து மே 19 அன்று 90 பைசா உயர்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக விலை ஏறியுள்ளது. இதன் மூலம் கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
